சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்துகளிலும் இனி பயணிக்கலாம்!!

1 day ago 2

சென்னை : பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ‘சிங்கார சென்னை’ பயண அட்டை திட்டத்தை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார். மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் வகையிலான இந்த அட்டையின் மூலம் இனி மாநகரப் பேருந்துகளிலும் டிக்கெட் கட்டணத்தை செலுத்திக்கொள்ள முடியும். சென்னையில் மெட்ரோ ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மாநகர பேருந்துகளில் ஒரே ஸ்மார்ட் அட்டையை ஸ்வைப் செய்து எளிதாக பயணிக்கும் திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயன்படுத்தும் வகையில், சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை 2023ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

ரிசார்ஜ் செய்து கொள்ளும் வகையில் இருக்கும் ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி மாநகர பேருந்துகளிலும் பயணம் செய்யும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்துள்ளார். ஸ்டேட் வங்கி மூலம் தற்போதைக்கு 50,000 ஸ்மார்ட் அட்டைகள் கட்டணமின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கோயம்பேடு, பிராட்வே பேருந்து நிலையங்களில் உள்ள பயணச் சீட்டு விற்பனை மையங்களில் ஸ்மார்ட் அட்டைகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளன. நடத்துநர்கள், ஆன்லைன் மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்களில் ஸ்மார்ட் அட்டையை ரீசார்ஜ் செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி மெட்ரோ ரயில்கள் மட்டுமின்றி இனி சென்னை மாநகரப் பேருந்துகளிலும் இனி பயணிக்கலாம். விரைவில் மின்சார ரயில்கள், விரைவு ரயில்களிலும் ஸ்மார்ட் அட்டை திட்டத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

The post சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்துகளிலும் இனி பயணிக்கலாம்!! appeared first on Dinakaran.

Read Entire Article