சிங்கம்புணரியில் தயாராகுது… சிதம்பரம் கோயில் தேருக்கு மெகா வடக்கயிறு: பின்னும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்

2 hours ago 2

சிங்கம்புணரி: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள 5 தேர்களுக்கு மெகா வடக்கயிறு தயாரிக்கும் பணி சிங்கம்புணரியில் தீவிரமாக நடந்து வருகிறது. இதில், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் நூறாண்டுக்கும் மேலாக தென்னை நார் கயிறு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு கொச்சக்கயிறு, எருது கட்டும் கயிறு, சாரக் கயிறு, தேர்வடக்கயிறு என பலவகையான கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன.

6 அடி முதல் 200 அடி நீளம் வரை, பல்வேறு வகை கயிறுகள் தயாரிக்கப்பட்டு வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. சிங்கம்புணரி, காளாப்பூர், வேங்கைப்பட்டி, பிரான்மலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கயிறு தயாரிக்கும் தொழில் குடிசைத் தொழிலாளாக நடந்து வருகிறது. பெரும்பாலும் இத்தொழிலில் பெண்களே ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தின் புகழ் பெற்ற கோயில் தேர்களுக்கு வடக்கயிறு தயாரிக்க ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன.

இதன்படி சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள 5 தேர்களுக்கு மெகா வடக்கயிறு தயாரிப்பதற்காக ஆர்டர் கிடைத்துள்ளது. இதையடுத்து ஊரில் உள்ள சேவுகப் பெருமாள் கோயில் பகுதியில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேர்வடக் கயிறுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து கயிறு தயாரிப்பாளர்கள் கூறுகையில், ‘200 அடி நீளத்தில் 18 இன்ச் சுற்றளவு கொண்ட 10 தேர் வடக்கயிறு தயாரிக்கும் பணி, 40 தொழிலாளர்கள் மூலம் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது. சிதம்பரம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள கோயில்களுக்கு 10 தேர்வடக்கயிறுகள் தயாரிக்க ஆர்டர் பெறப்பட்டுள்ளது. இதற்காக 30 டன் தேங்காய் நார்களை கொண்டு தேர்வடக்கயிறு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

பெரும்பாலான தேர்களின் சக்கரங்கள் இரும்பு சக்கரங்களாக மாற்றப்பட்டுள்ளதால், சங்கிலி செயின்களை கொண்டு தேர் இழுக்கும் பொழுது தேரின் வேகம் அதிகமாக இருந்தால், அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகும். இதனால், தேர்வடக்கயிறுகளை தற்போது அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால், தேர்வடக்கயிறுகளுக்கு தேவை அதிகரித்துள்ளது’ என்றனர்.

The post சிங்கம்புணரியில் தயாராகுது… சிதம்பரம் கோயில் தேருக்கு மெகா வடக்கயிறு: பின்னும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article