சென்னை: சென்னையில் இருந்து நேற்று சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் 11 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் 152 பயணிகள் கடும் அவதிப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், வழக்கமாக, சிங்கப்பூரில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு சென்னை வந்துவிட்டு, மீண்டும் அதிகாலை 2.50 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும். அதேபோல, வழக்கமான நேரத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணிக்கு, விமானம் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து விட்டது. ஆனால் சென்னையில் இருந்து அதிகாலை 2.50 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட வேண்டிய விமானம் 11 மணி நேரம் தாமதமாக நேற்று மதியம் 1.55 மணிக்கு புறப்பட்டு சென்றது.
இந்த விமானத்தில் சிங்கப்பூருக்கு 152 பயணிகள் செல்ல இருந்தனர். தாமதம் பற்றிய தகவல் முன்னதாகவே, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் தெரிவித்து விட்டதால் பயணிகளில் பெரும்பாலானோர் விமான நிலையத்திற்கு வரவில்லை. ஆனாலும் தகவல் கிடைக்காத ஒரு சில பயணிகள், விமான நிலையத்திற்கு வந்துவிட்டு, விமானம் தாமதம் என்பது அறிந்து திரும்பிச் சென்றனர். நிர்வாக காரணங்களால் விமானம் புறப்படும் நேரம் 11 மணி நேரம் தாமதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானம் திடீரென 11 மணி நேரம் தாமதம் ஆனதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
The post சிங்கப்பூர் விமானம் 11 மணிநேரம் தாமதம்: 152 பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.