
சிங்கப்பூர்,
சிங்கப்பூர் நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து மக்கள் செயல் கட்சி ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. கடந்த தேர்தலில் (2020) மீண்டும் தனது மெஜாரிட்டியை நிரூபித்து ஆட்சியைக் கைப்பற்றியது. மொத்தம் உள்ள 93 தொகுதிகளில் 83 தொகுதிகளில் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்றிருந்தது.
ஆனால் எதிர்க்கட்சி முன்பைவிட கூடுதல் இடங்களை பிடித்தது. எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6-ல் இருந்து 10 ஆக உயர்ந்தது. ஆளுங்கட்சியான மக்கள் செயல் கட்சியின் வாக்கு வங்கியும் 61 சதவீதமாக சரிந்தது.
இந்த நிலையில், சிங்கப்பூர் பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. பொதுத்தேர்தலை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. கடந்த மாதம் 23-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
தொடர்ந்து மே 3-ந்தேதி(நேற்று) பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பின் நடைபெறும் 14-வது பொதுத்தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலில் ஆளுங்கட்சியே மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.
இந்நிலையில், சிங்கப்பூர் பொதுத்தேர்தலில், ஆளும் பி.ஏ.பி.(People's Action Party) கட்சி 87 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதன்மூலம் அக்கட்சியின் லாரன்ஸ் வாங் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
அதோடு பி.ஏ.பி. கட்சியின் வாக்கு சதவிகிதம் 2020 தேர்தலில் 61.2% ஆக இருந்த நிலையில், தற்போது 65.6% ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் சிங்கப்பூரின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, 10 இடங்களை தக்க வைத்துக் கொண்டது.
இந்த நிலையில், சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற லாரன்ஸ் வாங்கிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பொதுத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற லாரன்ஸ் வாங்கிற்கு வாழ்த்துகள். இந்தியா-சிங்கப்பூர் இடையே வலுவான உறவு உள்ளது. சிங்கப்பூருடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.