
சிங்கப்பூர் சிட்டி,
ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண். இவரது இளைய மகன் மார்க் சங்கர் (வயது 10). சிறுவன் மார்க் சங்கர் சிங்கப்பூரின் ரிவர் வேலி பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்தான். அந்த பள்ளி, அடுக்குமாடி கட்டிடத்தின் 3வது மாடியில் செயல்பட்டு வந்தது.
இதனிடையே, அந்த பள்ளியில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், பள்ளி மாணவி உயிரிழந்தார். மேலும், பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, படுகாயமடைந்த மார்க் சங்கர் உள்பட அனைவரும் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து அறிந்த பவன் கல்யாண் நேற்று சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகன் மார்க் சங்கரை பவன் கல்யாண் இன்று சந்தித்தார். தீ விபத்தில் கை, கால்களில் படுகாயமடைந்த மார்க் சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தீ விபத்தின்போது கரும்புகையை சுவாசித்ததால் சிறுவனுக்கு நுரையீரலில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மகனை பவன் கல்யாண் சந்தித்தார். மேலும், மகனின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் அவர் விசாரித்தார்.