திருமங்கையாழ்வார் சிறுபுலியூருக்கு வருகிறார். பெருமாளைப் பார்த்தவுடன் அவருக்கு ஒரு குறை வருகிறது அவர் மிகப் பிரம்மாண்டமான சயன கோல பெருமாளைப் பார்ப்பதற்காக வந்தார். ஆனால் இங்கே அவருக்கு சிறிய உருவில் பெருமாள் காட்சி தந்தவுடன் ஆழ்மனதில் ஒரு குறை ஏற்பட்டது. அதைப் புரிந்து கொண்ட எம்பெருமான், ‘‘நீர் திருக்கண்ணமங்கை சென்றால் உமது குறை தீர ஆஜானுபாகுவாக நிற்கும் பெரிய பெருமாளைச் சந்திக்கலாம்’’ என்று சமாதானம் சொல்லி அனுப்பியதாக ஒரு குறிப்பு உண்டு. ஆழ்வாரும் சமாதானம் அடைந்து எம்பெருமானுடைய பரம கருணையை நினைத்துப்பாடுகின்றார்.
“கருமாமுகில் உருவா! கனல் உருவா! புனல் உருவா
பெருமாள் வரை உருவா! பிறஉருவா! நினதுஉருவா!
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமா கடல்அமுதே! உனது அடியே சரண்ஆமே
கருடனுக்கு பெருமாள் அபய
மளித்த இடம்’’
.
இங்கு பூமிக்கு கீழ் கருடனுக்கு சந்நதியும், மிக உயர்ந்த இடத்தில் ஆதி சேடனுக்கும் சந்நதி உள்ளது. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப் பட்ட பெருமாள் கோயில் ஆகும். நாகதோசம் நிவர்த்திக்கும் மற்றும் மக்கட்பேற்றுக்கும் இத்தலத்திற்கு ஏற்பட்ட தனிப் பெருமை உண்டு.
தல புராணம்
இத்தலத்தைப் பற்றிய வரலாறு கருட புராணத்தில் இருக்கிறது. பெருமாளின் படுக்கை ஆதிசேஷன் (அனந்தன்) வாஹனம் கருடன். கருடனுக்கும் அனந்தனுக்கும் பகை வந்து விடுகிறது.
என்ன பகை?
பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக ஆதிசேஷ னுக்கும் நினைப்பு. கருடன் மட்டும் சும்மாவா? எல்லா இடங்களிலும் அவரைச் சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. ஆதிசேஷன் இத்தலத்தில் தவமிருந்தார். அவர் தவத்துக்கு இரங்கிய பெருமாள் மாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினத்தன்று அவருக்கு சேவை சாதித்தார். அவர் வேண்டுகோள்படி ஆதிசேஷன் மடியில் அனந்த சயனம் கொண்டு சிறு குழந்தையாக பாலசயனக் கோலத்தில் கோயில் கொண்டார். அதே நேரத்தில் கருடனுக்கும் அபயமளித்தார். இத்தலத்தில் உயரத்தில் ஆதிசேடனுக்கும் பூமிக்கு கீழ் கருடனுக்கும் சந்நதி அமைந்துள்ளது.
கோயில் அமைப்பு
அருமையான ராஜகோபுரம். உள்ளே நுழைகிறோம். அழகான பிரகாரம். சுத்தமாக இருக்கிறது. தெற்கு நோக்கி காட்சி தரும் கோயிலின் மூலவர் பெயர் ஸ்தலசயனப் பெருமாள். கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியாசர், வியாக்கிரபாதர், கங்கையுடன் காட்சியளிக்கிறார்.
தாயார் பெயர்
திருமாமகள் நாச்சியார்.
உற்சவர் உபய நாச்சிமாருடன் காட்சி தரும் அழகு அற்புதம்.
உற்சவர் பெயர் கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) – உற்சவ தாயார் பெயர் தயாநாயகி. தீர்த்தக் குளம் – மானஸ புஷ்கரிணி. மனதால் உற்பத்தியான அல்லவா விமானம் – நந்தவர்த்தன விமானம் என்ற அழகிய விமானம்.
புலிக்கால் முனிவர் என்கின்ற வியாக்ரபாதர் தில்லை நடராஜரின் தரிசனத்தைக் கண்டார். அவர் மோட்சம் பெற விரும்பியபோது நடராஜனிடம் கேட்டார். நடராசர் அருளியபடி வியாக்கிரபாதர், திருச்சிறுபுலியூர் ஸ்தலசயனப் பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் இத்தலத்திற்கு திருச்சிறுபுலியூர் எனப் பெயராயிற்று.
சந்நதிகள்
ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மரம், பலி பீடம், கருடாழ்வார் சந்நதி ஆகியவை உள்ளன. அடுத்து உட்கோபுரமான சிறிய கோபுரம் உள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் விநாயகர், பெருமாள், விஷ்ணு துர்க்கை ஆகியோர் உள்ளனர். விஷ்வக்சேனர் உள் திருச்சுற்றில் உள்ளார். மூலவர் சந்நதி முன் வலது புறம் பள்ளியறை உள்ளது. வெளித்திருச்சுற்றில் ஆண்டாள் சந்நதி, பால அனுமார் சந்நதி, திருமாமகள் தாயார் சந்நதி, ஆழ்வார் சந்நதி, யாகசாலை, திருமடைப்பள்ளி, திருவாய்மொழி மண்டபம் ஆகியவை உள்ளன.
விழாக்கள்
வைகுண்ட ஏகாதசி
வைகாசி மாதம் பிரம்மோற்சவம்
ஐப்பசி மாதம் மணவாள மாமுனி விழா
மாசி மாதம் அனந்தாழ்வார் விழா
எங்கே இருக்கிறது?
திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில், திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி யிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.108 திவ்ய தேசங்களில் இருபத்தி நான்காவது சோழ நாட்டுத் தலம்.
The post சிக்கலைத் தீர்க்கும் சிறுபுலியூர் appeared first on Dinakaran.