சிக்கலில் சித்தராமையா

1 month ago 9

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை எப்படியாவது காலி செய்துவிட வேண்டும் என்பதும் பா.ஜவின் விருப்பம். பல்வேறு தந்திரங்களை கையாண்டும் இதுவரை முடியவில்லை. ஆட்சியை காப்பாற்றும் அஸ்திரமாக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளார். எத்தனை வழிகளில் முயன்றாலும், அத்தனையும் தடுக்கும் ஆற்றல் டி.கே. சிவக்குமார் வசம் இருப்பதால் இப்போது வரை கர்நாடகா ஆட்சிக்கு ஆபத்து இல்லை. ஆனால் மூடா நில முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையா பதவிக்கு புதிய ஆபத்து வந்து இருக்கிறது.

மைசூரு மாநகர வளர்ச்சி குழுமம் சித்தராமையாவின் மனைவி பார்வதி பெயரில் இருந்த 3.16 ஏக்கர் நிலத்தை வீடுகள் கட்டுவதற்காக கைப்பற்றியது. அதற்கு பதிலாக மைசூரு நகரின் மையப்பகுதியில் 14 மனைகளை பல்வேறு இடங்களில் ஒதுக்கியது. சித்தராமையாவின் மனைவி பார்வதியிடம் இருந்து பெறப்பட்ட நிலத்திற்கு ஈடாக ஒதுக்கப்பட்ட வீட்டு மனையின் மதிப்பு கூடுதலாக இருந்ததால் சர்ச்சை எழுந்தது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா என்பவர் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் மனு அளித்தார். இதன் மீது விசாரணை நடத்த ஆளுநர் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சித்தராமையா தாக்கல் செய்த ரிட் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் மூடா நில முறைகேடு வழக்கு தொடர்பாக மைசூரு லோக்ஆயுக்தா விசாரணை நடத்தி 90 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த நிலமுறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடத்திருக்கலாம் என்பதால் அமலாக்கத்துறையும் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் சித்தராமையா மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுனசாமி மற்றும் நில உரிமையாளர் தேவராஜ் ஆகியோர் மீது லோக்ஆயுக்தா போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதல்வராக இருக்கும் சித்தராமையாவிடம் எப்படி விசாரணை நடத்துவது என்பது குறித்து லோக்ஆயுக்தா போலீசார் ஆலோசனை நடத்தி வரும் வேளையில், இந்த பிரச்னையில் இருந்து எப்படி தப்பலாம் என்ற ஆலோசனை சித்தராமையா இல்லத்தில் நடந்தது.

ஏனெனில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துவிட்டதால், டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் போல் தனக்கும் அமலாக்கத்துறை குறிவைக்கலாம் என்ற முடிவுக்கு சித்தராமையா வந்து விட்டார். அதனால் தான் இந்த ஆலோசனை. இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களின் ஆலோசனைப்படி மைசூரு மாநகர வளர்ச்சி குழுமம் ஒதுக்கிய 14 மனைகளை திருப்பி வழங்குவதாக சித்தராமையா மனைவி பார்வதி கடிதம் எழுதினார். இது அடுத்த சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சித்தராமையாவின் மனைவி பார்வதி எழுதியுள்ள கடிதத்தில், ‘குடும்ப கவுரவத்தை தவிர எனக்கு வேறு எந்த சொத்தும் அவசியமில்லை.

நிலத்தால் தேவையற்ற அரசியல் சர்ச்சைகள் நடப்பது வேதனையாக இருக்கிறது. எனவே எனக்கு ஒதுக்கப்பட்ட 14 வீட்டு மனைகளை நான் எனது சுயவிருப்பத்தின் பேரில் ஒப்படைக்கிறேன்’ என்று ெதாிவித்துள்ளார். இது அடுத்த பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. நிலத்தை திருப்பி அளித்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து முதல்வர் சித்தராமையா தப்பிக்க முடியாது. நிலத்தை திரும்ப ஒப்படைப்பதில் இருந்து தவறு நடந்திருப்பது உறுதியாகிறது என்கிறார் பா.ஜ மாநில தலைவரும், எடியூரப்பாவின் மகனுமான விஜயேந்திரா. இடியாப்ப சிக்கலில் மாட்டித்தவிக்கிறார் சித்தராமையா. முதல்வர் பதவி தப்புமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியும்.

The post சிக்கலில் சித்தராமையா appeared first on Dinakaran.

Read Entire Article