சாயல்குடி: சிக்கல் கிராமத்தில் புதர்மண்டி, சிதிலமடைந்துள்ள பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்து திறக்க வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம், சிக்கல் ஊரணி கரை பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு ரூ.30 லட்சம் மதிப்பில் தாய்திட்டம் 2ன் கீழ் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.இங்கு உடற்பயிற்சிக்கான உபகரணங்கள், தளவாட பொருட்கள், சிறு இயந்திரங்களுடன் உடற்பயிற்சி செய்ய தனி அரங்கு, இறகு பந்து விளையாட்டு மைதானம், குழந்தைகள் விளையாட ஊஞ்சல், சருக்கு தளம் மற்றும் 8 வடிவிலான நடைபயிற்சி தளம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. ஆனால் அமைக்கப்பட்டது முதல் பயன்பாடின்றி பூட்டி கிடப்பதால் உபகரணங்கள், தளவாட பொருட்கள், உள்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தும் சேதமடைந்து வருகிறது.
மேலும் பூங்கா வளாகம் முழுவதும் முள்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இது குறித்து சிக்கல் பகுதி இளைஞர்கள் கூறும்போது, `இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ராணுவம், துணை ராணுவம், காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பணிகளில் சேர பயிற்சியில் ஈடுபடவும், உடற்கட்டை பராமரிக்கவும் உடற்பயிற்சி அவசியம். சிக்கல் ஊரணி கரையில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் திறக்கப்படாமல் பயன்பாடின்றி உள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உடற்பயிற்சி உபகரணங்கள், பொருட்கள், உள்கட்டமைப்பு வசதிகள் சிதிலமடைந்து வருகின்றன. எங்களால் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. கிராம பகுதி என்பதால் தனியார் உடற்பயிற்சி கூடம் இல்லை, மேலும் அருகில் 3 அரசு பள்ளிகள் உள்ளன. அங்கு படிக்கும் மாணவர்களுக்கும் விளையாட போதிய வசதிகள் கிடையாது.
எனவே கிராமப்புற இளைஞர்கள், மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காவை சீரமைத்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
The post சிக்கலில் சிதிலமடைந்த பூங்கா சீரமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.