மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ்குமார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிவராஜ்குமார் கன்னடம் மட்டுமின்றி பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த சூழலில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, டாக்டர்களின் அறிவுரைப்படி அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், இதனை சிவராஜ்குமார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில் நேற்று சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார் சிவராஜ்குமார். புளோரிடாவிலுள்ள மியாமி இன்ஸ்டியூட்டில் சிகிச்சை பெறவிருக்கிறார். வரும் 24-ம் தேதி இவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவராஜ்குமார் பேசியதாவது: 'இந்தச் செய்தியை ஊடகங்கள் பெரிதுபடுத்தாததுக்கு மிக்க நன்றி. நடிகர்கள், ரசிகர்களிடமிருந்து எனக்கு வாழ்த்துகள் வந்ததுக்கு எனக்கு மகிழ்ச்சி. பரிசோதனையில் முக்கியமான காரணிகள் எல்லாம் நல்ல விதமாகவே இருக்கின்றன. திடீரென அறுவைச் சிகிச்சைக்காக செல்வது வீட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும். எனது குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர்களை பார்க்கும்போது எனக்குமே சிறிது உணர்ச்சிவசப்படத் தோன்றுகிறது. அவர்களைப் பார்க்கும்போதுதான் கவலையாக இருக்கிறது. மற்றபடி நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்' என்றார்.