*பேராசிரியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சி
ஈரோடு : தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கையால், தந்தை பெரியாரின் வழிகாட்டுதலின் படி தொடங்கப்பட்ட ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்திருப்பது கல்வியாளர்கள், மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் அரசுக்கல்லூரியாக அறிவித்து புதிய திட்டங்களை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் அமைந்துள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரி, கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவுக் கல்லூரியாகும். இக்கல்லூரியானது, தந்தை பெரியாரின் வழிகாட்டுதலின் பேரில், மகாஜன பள்ளிக் குழுமத்தால், பொதுமக்களிடம் இருந்து நிலம் மற்றும் பணமாக பெறப்பட்ட நன்கொடைகள், உதவியால் 1954 ஜூலை 12ம் தேதி நிறுவப்பட்டது.
52 ஏக்கர் பரப்பில் முதலில் ‘‘மகாஜன கல்லூரி’’ என்று பெயரில் துவக்கப்பட்ட இக்கலூரி 1959ல் சிக்கய்ய நாயக்கர் மகாஜனக் கல்லூரி என்றும், 1970ல் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி என்றும் பெயர் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
150 மாணவர்களுடன் துவக்கப்பட்ட இக்கல்லூரியானது, 70 ஆண்டுகளில், 1,400 மாணவர்கள் பயிலக்கூடியதாகவும், பட்ட மேற்படிப்புகளை வழங்குவதாகவும், ஆராய்ச்சி நிறுவனமாக வளர்ந்துள்ளது. இக்கல்லூரியில், தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை, வணிகவியல், பொருளியல், இயற்பியல், தாவரவியல், வேதியியல், விலங்கியல், வரலாறு, கணிதவியல், மேலாண்மையியல் என 13க்கும் மேற்பட்ட துறைகள் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக, 3 முதுகலைப் படிப்புகளும், பட்டைய படிப்புகள், முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சி திட்டங்களைக் கொண்டுள்ளது. சிக்கய்யா நாயக்கர் கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரியாக இருந்தாலும்கூட, கடந்த 1998 முதல், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
கல்லூரியானது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அங்கீகாரம் பெற்றுள்ளது.
இந்நிலையில், சி.என். கல்லூரி அறக்கட்டளை மற்றும் அதன் கல்வி அமைப்பானது கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு செயலற்று போனது.
இதுதொடர்பான, சட்ட ஆய்வுகளை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் அரசு சொத்துக்களாக கடந்த 2005ம் ஆண்டு அறிவித்தது. ஆனால், அக்கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. அதே சமயம், கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கோவை மண்டல இணை ஆணையரின் கட்டுப்பாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக சிக்கய்ய நாயக்கர் கல்லூரி செயல்பட்டு வந்தது.
இக்கல்லூரியை, அரசுக்கல்லூரியாக மாற்ற வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, விவசாய சங்கங்கள், மாணவர் அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் உள்ளிட்டவை கோரிக்கை விடுத்தும், போராடியும் வந்தன. பின்னர், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது, சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால், அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை.
இதனையடுத்து, ஆட்சிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றுவது தொடர்பாக, கடந்த 2022 மார்ச் மாதம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து ஒன்றிய அரசுக்கு அனுப்பியது. பின்னர் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதா கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் கல்வித்தரம் பாதிக்கப்பட்டதுடன், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி காணப்படுகிறது. குறிப்பாக, உள்கட்டமைப்பு வசதி, பேராசிரியர்களின் எண்ணிக்கை, ஆய்வகங்கள், நூலகம் உள்ளிட்டவைகள் போதுமானதாக இல்லை. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தீவிர முயற்சியால், சிக்கய்யா நாயக்கர் கல்லூரியை, அரசுக்கல்லூரியாக மாற்றுவதற்கு குடியரசுத்தலைவர் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரகாஷ் எம்பி கூறியதாவது: ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி 1954ம் ஆண்டு, தந்தை பெரியாரின் முயற்சியால் மகாஜனக் கல்லூரி என்ற பெயரில் தொடங்கி கல்லூரி, சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டது. இக்கல்லூரி தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ஏழை, எளிய குழந்தைகள் குறைந்த கட்டணத்தில் பயின்று வருகின்றனர்.
கல்வி என்பது கல்லூரியில் சேரப்போகும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயம். முழுமையான உள்கட்டமைப்பு வசதிகளும், தரமான முழு கல்வித் தகுதியுடைய பேராசிர்களையும் கொண்ட கல்லூரிகள் மூலம் தரமான மாணவர்களை உருவாக்க முடியும்.
ஆனால், நமது சிக்கய்ய நாயக்கர் கல்லூரி, அரசுக்கல்லூரியாக மாற்றப்படாததால், மாணவர்- ஆசிரியர் விகிதாசாரம், ஆய்வகங்கள், கணினி எண்ணிக்கை, அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் ஆகியவை போதுமானதாக இல்லை. இவை தவிர, உள்கட்டமைப்பில் இன்னும் பல சிக்கல்கள் உள்ளன.
சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை, அரசுக்கல்லூரியாக மாற்றப்பட்டால் மட்டுமே, போதிய நிதியை பெற்று, கல்லூரியில் நிலவும் அடிப்படை சிக்கல்களை தீர்க்க முடியும். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும். இதன் மூலம், மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை மேம்படுத்த முடியும்.
இதனைக்கருத்தில் கொண்டு, கடந்த 2022ம் ஆண்டு, சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக்கல்லூரியாக மாற்றுவதற்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிக்காட்டலுடன், சிக்கய்யா நாயக்கர் கல்லூரி தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக பேசியும், கேள்வி எழுப்பியும் வந்தேன். தற்போது தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கையால், அரசுக்கல்லூரியாக மாற்றுவதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
கூடிய விரைவில் தமிழ்நாடு அரசு உரிய முறையில் சிக்கய்யா நாயக்கர் கல்லூரியாக அறிவித்து, புதிய திட்டங்களை அறிவித்து, கல்லூரியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும். இதன் மூலம் ஏழை, எளிய, நடுத்தர என அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கல்வி வழங்கி, தந்தை பெரியாரின் கனவை தமிழ்நாடு அரசு நினைவாக்கும். இதுவே நாம் தந்தை பெரியாருக்கு செய்யும் தொண்டு ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
The post சிஎன் கல்லூரியை அரசுக்கல்லூரியாக மாற்ற ஒப்புதல் விரைவில் அறிவித்து திட்டங்களை நிறைவேற்ற கோரிக்கை appeared first on Dinakaran.