
பெங்களூரு,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மொத்தமுள்ள 70 லீக்கில் இதுவரை 51 ஆட்டங்கள் முடிந்துள்ளது. முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அடுத்து சுற்று வாய்ப்பை (பிளே-ஆப்) இழந்து வெளியேறி விட்டன.
'பிளே-ஆப்' சுற்றின் 4 இடங்களுக்கு 8 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 52-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது.
ஏற்கனவே சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்று இருந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றிப்பாதைக்கு சென்னை அணி திரும்புமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
இவ்விரு அணிகள் இதுவரை 34 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில் 12-ல் பெங்களுருவும், 21-ல் சென்னையும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இந்நிலையில், பெங்களூருவில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் 70 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த இரு தினங்களாக பெங்களூருவில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஆட்டம் முழுவதுமாக நடைபெறுமா? இல்லையா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஒருவேளை இந்த ஆட்டம் முழுமையாக நடைபெறாத பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.