
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 2016-ல் மெழுகுவர்த்தி சின்னத்திலும், 2019 முதல் 2021 வரை கரும்பு விவசாயி சின்னத்திலும் தேர்தலை சந்தித்தது. 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் வைத்துள்ள சின்னங்கள் பட்டியலில் இருந்து மைக் சின்னத்தை தேர்வு செய்து நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, மாநில கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றது.
இந்த நிலையில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதன்படி, கலப்பையுடன் விவசாயி இருப்பது போன்ற சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சின்னத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள சீமான், "மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.