
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் இன்று அதிகாலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சிலர், சாலையில் சில சி.டி.க்கள் சிதறிக் கிடப்பதை கண்டனர். அருகில் சென்று பார்த்தபோது அந்த சி.டி.க்களில் தமிழக அரசின் பதிவுத்துறை முத்திரை அச்சிடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த இளைஞர்கள் சாலையில் சிதறிக் கிடந்த 50-க்கும் மேற்பட்ட அரசு முத்திரையுடன் கூடிய சி.டி.க்களை சேகரித்து உத்திரகோசமங்கை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவற்றை போலீசார் ஆய்வு செய்தபோது, அந்த சி.டி.க்கள் ராமநாதபுரம் மாவட்ட பதிவுத்துறை அலுவலகத்தின் 2024-25ம் ஆண்டுக்கான தரவுகளை கொண்ட சி.டி.க்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அரசின் முக்கிய ஆவணங்கள் மற்றும் கோப்புகள் இந்த சி.டி.க்களில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அரசு உயர் அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் மர்ம நபர்கள் இவ்வாறு அரசின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய சி.டி.க்களை சாலையில் வீசிவிட்டுச் சென்றார்களா? என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து ராமநாதபுரம் பதிவுத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.