சாலைகளில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த கொட்டகை மாடு, செல்லப்பிராணிகளை கண்காணிக்க மைக்ரோ சிப்: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

4 hours ago 1

சென்னை: சென்னை மாநகரட்சி மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் 112 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய தீர்மானங்கள் விவரம் வருமாறு:
* பிராட்வே பேருந்து நிறுத்தத்தில் ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. எனவே, மாநகர பேருந்துகளை இயக்குவதற்காக, இப்ராஹிம் சாலையில் உள்ள, சென்னை துறைமுக பொறுப்பு கழகத்திற்கு சொந்தமான, 3.5 ஏக்கர் பரப்பளவு பயன்படுத்தப்பட உள்ளது. அதற்கு, ஓராண்டு குத்தகை தொகை, ரூ.3.95 கோடி மற்றும் ஜி.எஸ்.டி., ரூ.71 லட்சத்துடன், திரும்ப பெறும் வகையிலான பாதுகாப்பு வைப்பு தொகை ரூ.7.90 கோடி செலுத்தப்படும்.
* மாநகராட்சியில் ஐ.டி. பார்க், திருமண மண்டபங்கள், ஓட்டல் உள்ளிட்டவற்றிற்கு, 2013ல் சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதன்படி, 2022-23ம் ஆண்டில் குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத வணிக கட்டடங்கள் என, சொத்துவரி மறு மதிப்பீடு செய்யப்பட்டதால், 2013ல் செயல்படுத்தப்பட்ட சொத்துவரி உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
* கடந்த 2011ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், வாக்குச்சாவடி மையங்களுக்கான தடுப்பு வேலிகள், மின் விளக்கு உள்ளிட்ட பணிகளுக்கு, ரூ.23.66 லட்சம் பெறப்பட்டது. அதில் பணியாற்றிய அதிகாரிகள் ஓய்வு பெற்றத்தால், அத்தொகை தணிக்கை செய்யாமல் நேர் செய்யப்படுகிறது.
* மாநகராட்சியில் குப்பை கொட்டும், 289 வாகனங்களில், ஜி.பி.எஸ்., ஜி.ஐ.எஸ்., கருவிகள் பொருத்த, தகவல் தொழில்நுட்ப மைய நிதியை பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளில் செல்ல பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்தும் வகையில், உரிமையாளர்களுக்கு பதிவு உரிமம் வழங்கப்படுகிறது. இதுவரை, 9,151 செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
* வளர்ப்பு நாய்களுக்கு வயதாகிவிட்டாலோ அல்லது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டாலோ அவற்றை தெருவில் விட்டு விடுகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி, அதன் முழு விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்து கண்காணிக்க முடியும். மேலும், வளர்ப்பு நாய்கள் தெருவில் சுற்றிக் கொண்டிருந்தால், அதை மைக்ரோ சிப் உதவியுடன் கண்டறிந்து உரிமையாளரிடம் வழங்க முடியும். வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் விவரம் முழுமையாக கிடைக்காததால், ‘மைக்ரோ சிப்’ செல்லப்பிராணிகளுக்கு பொருத்தப்படும். அதன்படி, சென்னையில் கால்நடை மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு வரும் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்த அனுமதி வழங்கப்பட்டது.
* செல்லப்பிராணிகள், உரிமையாளர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்ய, இணையவழி மென்பொருள் மற்றும் செயலி உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பேருந்து சாலைகளில், 81 நவீன 3டி மாடல் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கப்படும்.
* போக்குவரத்து மிகுந்த சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவது. இந்த பிரச்னையை போக்க, மாமன்ற கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக மண்டலம் 5ல் பேசின் பாலம் சாலையில், 7,700 சதுர அடியில், 100 மாடுகள் தங்கும் அளவிற்கு நவீன மாட்டுக் கொட்டகை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் மாடுகளை கட்டுவதற்கு நாள் ஒன்றிற்கு ரூ.10 வீதம் வாடகை நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
* சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பின் போது சுண்டல், பிஸ்கட், பிரட் கேக், வேர்க்கடலை, பர்பி, வாழைப்பழம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று வாரத்தில் 6 நாட்களுக்கு வழங்குவதற்கும் சுண்டல் பயறு வகைகள் மற்றும் சிற்றுண்டிகள் தமிழ்நாடு பனைவெல்லும் உற்பத்தியாளர் கூட்டுறவு இணைய சங்கத்தின் மூலம் கொள்முதல் செய்து 81 சென்னை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யவும் பள்ளி தலைமையாசிரியர் மூலமாக சுண்டல் தயார் செய்து வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
* நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சமுதாய நல மையங்களில், 107 டாக்டர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் ஒப்பந்தகாலம் 2026 ஜன., 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், ரூ.75 கோடி மதிப்பில் புதிய கவுன்சில் கூட்ட அரங்கம் அமைக்கப்படும்.
* மாநகராட்சியின் பல்வேறு நீர்நிலைகளில் தடுப்பு சுற்றுச்சுவர், வேலிகள், கரைகள் பலப்படுத்த அனுமதிக்கப்படுகிறது. வடசென்னை வளர்ச்சி திட்டத்தில், சாலை, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.150.12 கோடி மதிப்பில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது, உள்ளிட்ட 112 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

* சொத்து வரி உயர்வை கைவிட வலியுறுத்தல்
திமுக கவுன்சிலர் மணிமாறன் பேசுகையில், ‘‘தற்போது தான் 6 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் அளவுக்கு சொத்து வரியை உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. மேலும், சட்டசபை தேர்தலும் வருவதால், சொத்துவரி உயர்வை கைவிட வேண்டும்,’’ என்றார். இதற்கு மேயர் பிரியா பதிலளிக்கையில், ‘‘சொத்துவரி உயர்வு குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும்,’’ என்றார்.

* அநாகரீகமாக பேசிய பாஜ கவுன்சிலர்
சென்னை மாநகராட்சி கூட்டத்தில், பாஜ கவுன்சிலர் உமா ஆனந்த் பேசும் போது பாஜ தலைவர்களை குறிப்பிட்டு பேசினார். அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் அம்பேத்வளவன் எழுந்து, ‘உமா ஆனந்த் குறிப்பிட்ட தலைவர்களின் மீது பல்வேறு நீதிமன்ற வழக்குகள் இருக்கிறது என்று குற்றம்சாட்டினார். இதனால், இரு தரப்பிற்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பாஜ கவுன்சிலர் உமா ஆனந்த் அநாகரீகமான வார்த்தையை உபயோகப்படுத்தினார். இதற்கு மேயர் பிரியா உட்பட அனைவரும் கண்டித்தனர். இதை தொடர்ந்து, உமா ஆனந்த் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

The post சாலைகளில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த கொட்டகை மாடு, செல்லப்பிராணிகளை கண்காணிக்க மைக்ரோ சிப்: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Read Entire Article