சென்னை: சாலை விபத்துகளால் ரத்த தான தேவை அதிகரித்துள்ளதாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார். வி.எச்.எஸ் பன்னோக்கு மருத்துவமனை ரத்த மையத்தின் முன்னாள் இயக்குநர் ஜெ.பாலசுப்ரமணியம் நினைவுநாளையொட்டி ரத்த தானம் செய்பவர்கள் மற்றும் நன்கொடை யாளர்கள் அமைப்புகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
வி.எச்.எஸ் ரத்த மையத்தின் இயக்குநர் வி.மைதிலி தலைமை வகித்தார். மருத்துவமனை இயக்குநர் யுவராஜ் குப்தா வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் கலந்து கொண்டு வி.எச்.எஸ். மருத்துவமனையுடன் சேர்ந்து ரத்த தான முகாம்களை நடத்திய இந்திய தர கட்டுப்பாட்டு நிறுவனம், சென்னை ஐஐடி உள்பட 110 நிறு வனங்களை கவுரவித்தார். முன்னதாக மருத்துவமனையில் ‘தலசீமியா’ ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்கள், தங்களது கொடையாளர் களுக்கு நன்றி தெரிவித்தனர்.