புதுடெல்லி: நாடு முழுவதும் சாலை விபத்துக்களினால் பாதிக்கப்படுவோருக்கு கட்டணமில்லாமல் சிகிச்சை அளிக்கும் திட்டத்தை அரசு அமல்படுத்தி உள்ளது. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலை விபத்துக்களினால் பாதிக்கப்படுவோருக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டம் 2025ம் ஆண்டு மே 5ம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் விதிகளின்படி, எந்தவொரு சாலையிலும் மோட்டார் வாகனத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்தில் பாதிக்கப்பட்ட யார் வேண்டுமானாலும் பணமின்றி சிகிச்சையை பெறுவதற்கு உரிமை பெறுவார்கள்.
தேசிய சுகாதார ஆணையம் இந்த திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக இருக்கும். இது காவல்துறை, மருத்துவமனைகள் மற்றும் மாநில சுகாதார நிறுவனங்கள் போன்றவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும். பாதிக்கப்பட்டவர் விபத்து நடந்த நாளில் இருந்து அதிகபட்சம் 7 நாட்களுக்குள் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை பணமில்லா சிகிச்சையை பெறுவதற்கு உரிமை உண்டு. மாநில சாலை பாதுகாப்பு கவுன்சிலானது மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கான இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நோடல் ஏஜென்சியாக இருக்கும்.
நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சேருவதற்கான போர்டலை பயன்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு சிகிச்சை மற்றும் அது தொடர்புடைய விஷயங்களில் பணம் செலுத்துவதற்கும் தேசிய சுகாதார ஆணையத்துடன் ஒருங்கிணைப்பதற்கும் சாலை பாதுகாப்பு கவுன்சிலே பொறுப்பாகும். இந்த திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக ஒன்றிய அரசு வழிகாட்டுதல் குழுவை அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
The post சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு கட்டணமில்லா சிகிச்சை திட்டம் அமல் appeared first on Dinakaran.