சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி வந்த அவலம்: வரும் வழியில் குழந்தை பிறந்தது

12 hours ago 3

திருமலை: சாலை வசதி இல்லாததால் 3 கிமீ தூரம் கர்ப்பிணியை டோலி கட்டி மலைகிராம மக்கள் தூக்கி வந்தனர். வரும் வழியில் அவருக்கு குழந்தை பிறந்தது. ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ரெகபுனகிரி மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் இங்குள்ள பழங்குடியின மக்கள் சுமார் 3 கிமீ தூரமுள்ள எஸ்.கோட்டா அரசு மருத்துவமனைக்கும், பல்வேறு தேவைகளுக்கும் நகர்ப்புற பகுதிக்கு வருவதற்கு மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மருத்துவமனைக்கு அவசர உதவிக்காக கர்ப்பிணிகள், முதியவர்கள், விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களை டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலை உள்ளது.

இந்நிலையில் நேற்று மலைக்கிராமத்தை சேர்ந்த பங்கி சீதம்மா (30) என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது கணவர் நரசிங்கராவ் மற்றும் அப்பகுதி மக்கள், டோலி கட்டி அவரை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். கரடுமுரடான மலைப்பாதை வழியாக டோலியில் தூக்கி செல்லும்போது திடீரென நடுவழியிலேயே பிரசவம் ஏற்பட்டது. இதில் பங்கி சீதம்மாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாய், குழந்தையை டோலியிலேயே எடுத்துச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

சந்திரபாபுநாயுடு தலைமையிலான கூட்டணி அரசு ஏற்பட்ட பிறகு ரெகபுனகிரி கிராமத்திற்கு சாலை அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இப்பணி ஆமை வேகத்தில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே சாலைப்பணிகளை விரைவுபடுத்துமாறு ரெகபுனகிரி மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி வந்த அவலம்: வரும் வழியில் குழந்தை பிறந்தது appeared first on Dinakaran.

Read Entire Article