சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் 200 பேர் கைது

2 weeks ago 1

 

ஈரோடு, ஜன.23: ஈரோட்டில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்திய அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் (சி.ஐ.சி.யு.) 200 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு, சென்னிமலை சாலையில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜான்கென்னடி, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் ஜெகநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ரகு ராமன், சிஐ.டியு மாவட்ட தலைவர் சுப்ரமணியன், துணைத் தலைவர் முருகையா உள்ளிட்டோர் முன்னிலை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியில் இருப்பவர்களும், ஓய்வுபெற்ற ஊழியர்கள் இணைந்து இந்த சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.

இதில், அரசு போக்குவரத்துக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் தனியார் மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும். போக்குவரத்து ஊழியர்கள் 15-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து உடனடியாக பேசி முடிவெடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 1-4-2003க்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக சென்னிமலை ரோட்டில், காசிபாளையம் பிரிவை அடுத்துள்ள நகரக்கிளையில் இருந்து, அனைவரும் ஊர்வலமாக வந்து அருகில் உள்ள போக்குவரத்துக்கழக ஈரோடு மண்டல தலைமை அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போலீசார் மறியலில் ஈடுபட்ட 200 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

The post சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் 200 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article