சென்னை,
தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் பத்திரப்பதிவு, வில்லங்க சான்றிதழ் பெறுதல், திருமணப் பதிவு உள்ளிட்ட பதிவு சார்ந்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், சில சார்பதிவாளர் அலுவகங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அவிநாசி, அச்சிறுப்பாக்கம், திருப்போரூர், மரக்காணம், திருச்செங்கோடு, அரக்கோணம், தேனி ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. எனினும், சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே, கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்த விவரம் தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.