சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
கன்னியாகுமரியை தொடர்ந்து மதுரையிலும் சார் பதிவாளர் மீது தாக்குதல் – பொதுமக்கள் தொடங்கி அரசு அதிகாரிகள் வரை யாருக்குமே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் மூன்றரை ஆண்டு கால சாதனை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்திரப்பதிவு ஆவணத்தை நிராகரித்ததாக கூறி சார்பதிவாளர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை முயற்சி நடைபெற்ற நிலையில், மதுரை மாவட்டத்திலும் பத்திரத்தை பதிவு செய்ய மறுத்ததாக கூறி மற்றொரு சார் பதிவாளர் மீதும் தாக்குதல் நடைபெற்றிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி காவலர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் வரிசையில் தற்போது நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணியாற்றும் சார் பதிவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தும் அளவிற்கான அசாதாரண சூழல் உருவாகியுள்ளது.
கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்டங்களில் இயங்கி வரும் சார் பதிவாளர்கள் அலுவலகங்களில் நடைபெற்றிருக்கும் இந்த தாக்குதல் சம்பவங்கள் தமிழகத்தில் ஒட்டுமொத்த சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் அனைவரின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றி வரும் அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அரசு அதிகாரிகளின் மீது இது போன்ற தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.