சாரண சாரணியர் இயக்க வைர விழாவின் மூலம் தமிழ்நாட்டின் பெருமைகளை வெளிநாட்டவர் தெரிந்து கொள்வர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

1 week ago 1


திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில், பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழா நேற்று மாலை நடந்தது. இதனை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: வெளிமாநிலத்தவர் வெளிநாட்டினர் தமிழ்நாட்டினுடைய பெருமைகளையும், கலாச்சாரங்களையும் தெரிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி மிக முக்கியமானதாக அமையும். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கலாசாரம், பண்பாடு, மொழி அவர்களுடை பழக்கம் வழக்கம் என்பதை தமிழக மாணவர்கள் தெரிந்து கொள்ள மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

கடந்த 1907ம் ஆண்டு ராபர்ட் ஸ்டீபன்சன் ஸ்மித் பேடன் பவல் என்பவரால் பிரௌன்சீ தீவில் 20 சாரணர்களுடன் தொடங்கப்பட்டது. உலக அளவில் 100 மில்லியன் சிறார்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்கள். சாரண சாரணியர் இயக்கத்தின் நோக்கம் சிறுவர்களுக்கான சேவையை வெறும் புத்தகத்தில் மட்டும் படித்து மற்றவர்களுக்கு கற்பிப்பதற்கு பதிலாக அவர்களை களத்தில் இறக்கி விட்டு எப்படி அவர்களுக்கான சேவையை செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கும் விதமாக தொடங்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1950ம் ஆண்டு இந்தியாவில் சாரண, சாரணியர் இயக்கம் தொடங்கப்பட்டது.

முத்தமிழறிஞர் கலைஞர் சாரண, சாரணியர் இயக்கத்திற்கு முன்னோடியாக சாதி, மதம், இனம், மொழி உள்ளிட்ட எவ்வித வேறுபாடும் இல்லாமல், எல்லோரும் ஒரே இடத்தில் கூடி வாழும் பெரியார் சமத்துவபுரம் திட்டத்தை உருவாக்கினார். இந்த பெரியார் சமத்துவபுரம் திட்டம் தான் கலைஞர் கொண்டு வந்த திட்டத்தில் சிறந்த திட்டம். பெரியார் சமத்துவபுரம் போல சாரண, சாரணியர் இயக்கத்தினர் 7 நாட்கள் இங்கு ஒரே இடத்தில் கூடி இருப்பது மிகப்பெரிய வரலாற்று சாதனையாக அமையும். சாரண சாரணியர் வைர விழா நிகழ்ச்சி தமிழக வரலாற்றில் முக்கிய நிகழ்வாக அமையும். இவ்வாறு அவர் பேசினார். இந்த விழா பிப்.3ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என 20 ஆயிரம் சாரண சாரணியர்கள் பங்கேற்று உள்ளனர்.

பொதுசிவில் சட்டம் சாத்தியமற்றது: கர்நாடகா துணை முதல்வர் பேச்சு
வைர விழாவில் கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் சிறப்புரையாற்றுகையில், ‘இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டது எனது சிறுவயதை ஞாபகப்படுத்தியுள்ளது. முக்கியமாக, சாரண சாரணியர் மாணவனாக கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். நாட்டிலேயே முதன் முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, மற்ற மாநிலங்களில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த வாய்ப்பு இல்லை. அதே நேரம் இந்தியாவில் பொது சிவில் சட்டம் சாத்தியமற்றது’ என்றார்.

The post சாரண சாரணியர் இயக்க வைர விழாவின் மூலம் தமிழ்நாட்டின் பெருமைகளை வெளிநாட்டவர் தெரிந்து கொள்வர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article