லாகூர்: 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வரும் 23ம் தேதி துபாயில் பரம எதிரி பாகிஸ்தானை சந்திக்க உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகி விட்டன. கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் பைனலில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது அணியின் கேப்டனாக இருந்த சர்ப்ராஸ் கான், இந்த முறையும் இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தான் அணிக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “இந்தியா- பாகிஸ்தான் அணிகள் சந்திக்கும் போதெல்லாம் அது ஒரு சிறப்பான சந்தர்ப்பமாகவும் மற்றும் அதனைச் சுற்றி பரபரப்பும் அழுத்தமும் நிறைந்த சூழலாக இருக்கும். ஆனால் வீரர்களாக நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.
முதலில் அந்த சத்தத்தை தடுக்க முயற்சிக்க வேண்டும். மேலும் ஆஸ்திரேலியா அல்லது வேறு எந்த அணிக்கு எதிராக விளையாடுவது போல நினைத்து அதே தீவிரத்தோடு செயல்பட வேண்டும். தற்போதைய அணியின் கேப்டன் முகமது ரிஸ்வானும், 2017ம் ஆண்டு கேப்டனாக செயல்பட்ட நானும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் தான். தற்போது இந்த ஒற்றுமை எங்களிடம் இருக்கிறது. பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள பாகிஸ்தான் அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. 2017ம் ஆண்டு விளையாடிய சில வீரர்கள் இந்த ஆண்டும் விளையாடுகிறார்கள். எனவே தற்போது அணி மிகவும் வலுவாக உள்ளது. பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு உள்ளது, ஆனால் நான் எந்த அணியையும் நிராகரிக்கமாட்டேன்’’ என தெரிவித்துள்ளார்.
The post சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவை வீழ்த்த தீவிரத்தோடு செயல்பட வேண்டும்: பாகிஸ்தானுக்கு முன்னாள் கேப்டன் ஆலோசனை appeared first on Dinakaran.