
மும்பை,
இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. 19-ந்தேதி கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
முன்னதாக இந்த தொடரிலிருந்து நட்சத்திர பவுலரான பும்ரா காயம் காரணமாக விலகியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனெனில் தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவர் நல்ல பார்மில் இருக்கிறார். டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு அவர் தொடர்நாயகன் விருது வென்று முக்கியப் பங்காற்றியதை மறக்க முடியாது. அப்படிப்பட்ட அவர் விலகியுள்ளதால் சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்று பல தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கிரிக்கெட் என்பது டென்னிஸ், கோல்ப் போன்ற தனிநபர் விளையாட்டு கிடையாது என இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். எனவே பும்ரா விலகியதை நினைத்து ஏன் கவலைப்பட வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அவர்கள் வருடத்தில் 10 மாதங்கள் விளையாடுவதே எனக்கு உள்ள ஒரே கவலையாகும். அதன் காரணமாக காயங்கள் வருவது பொதுவான ஒன்றாகும். அணியில் இல்லாத ஒருவரை (பும்ரா) நினைத்து ஏன் கவலைப்பட வேண்டும். இது அணி விளையாட்டு. அணியாகத்தான் சேர்ந்து வெல்ல முடியும். தனிநபர்களால் வெல்ல முடியாது. இது ஒன்றும் பேட்மிட்டன், டென்னிஸ் அல்லது கோல்ப் கிடையாது.
சாம்பியன்ஸ் டிராபியில் நாம் அணி விளையாட்டை விளையாடப் போகிறோம். எனவே அணியாக சேர்ந்து விளையாடினால் கண்டிப்பாக நம்மால் வெல்ல முடியும். இப்போதுள்ள இளம் வீரர்களை பார்க்கும்போது அவர்களுடைய தன்னம்பிக்கை நம்ப முடியாத அளவிற்கு இருக்கிறது. உண்மையில் நாங்கள் இளமையாக இருந்தபோது கூட இவ்வளவு தன்னம்பிக்கையைக் கொண்டிருந்ததில்லை. எனவே இந்திய இளம் வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்" என்று கூறினார்.