
லாகூர்,
அண்மையில் முடிவடைந்த 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் தனது பிரிவில் (ஏ பிரிவு) கடைசி இடம் பிடித்து பரிதாபமாக வெளியேறியது. இதனால் அந்த அணியை அந்நாட்டின் பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். மேலும் கடந்த ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பைகளிலும் லீக் சுற்றை தாண்டாத அந்த அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பரிசளிக்கும் விழாவில் பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர். பாகிஸ்தான் சார்பாக எந்த ஒரு நிர்வாகியும் இடம்பெறவில்லை. இது சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் அந்த விழா மேடையில் இந்திய அணியின் அருகில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் நிற்க தகுதியற்றவர்கள் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் சாடியுள்ளார். ஏனெனில் பாகிஸ்தான் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை என்று அவர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஐ.சி.சி. நமக்கு கண்ணாடியை காண்பித்துள்ளது. தொடரை நடத்தும் இயக்குனர் அங்கே இருந்தார். ஆனால் அவர் விழா மேடையில் இல்லை. ஏன் அவர் மேடையில் இல்லை? ஏனெனில் நாம் அங்கே இருக்கும் தகுதியை பெறவில்லை. நாம் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை. இந்த தொடரை பாகிஸ்தான் எவ்வாறு நடத்தியது என்பதை பற்றி யாரும் விவாதிக்கவில்லை. நாம் அது போன்ற கிரிக்கெட்டை விளையாடுவதாலேயே இப்படி நடத்தப்படுகிறோம். நீங்கள் நாட்டுக்காக அல்லாமல் உங்களுக்காக விளையாடுகிறீர்கள். அதனாலேயே இவ்வாறு மதிக்கப்படுகிறீர்கள்" என்று கூறினார்.