
துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி சுற்று முடிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
முன்னதாக இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் துணை கேப்டனான சுப்மன் கில்லிடம் இறுதிப்போட்டிக்கு முன்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சுப்மன் கில், "இப்போதைக்கு வீரர்களின் ஓய்வறையிலேயோ அல்லது என்னிடமோ ரோகித் ஓய்வு குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. எல்லோரையும் போல் அவரும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அணியில் உள்ள யாரிடம் இருந்தும் இது போன்ற பேச்சுகள் வரவில்லை. எந்த முடிவு என்றாலும் இறுதிப்போட்டி முடிந்த பிறகே அவர் எடுப்பார் என நினைக்கிறேன்" என்று கூறினார்.