சாம்பியன்ஸ் டிராபி தொடர்; பும்ரா விளையாடுவாரா...? - அஜித் அகர்கர் பதில்

2 hours ago 1

புதுடெல்லி,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இந்த தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா இடம் பிடித்திருந்தாலும், அவர் இந்த தொடரில் விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஐந்தாவது போட்டியின் போது முதுகு பகுதியில் பும்ரா காயம் அடைந்தார். இதன் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் மற்றும் முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம் பிடிக்கவில்லை.

இந்நிலையில், பும்ரா குறித்து சில முக்கிய தகவல்கள் இன்று வெளியாகி உள்ளன. அதன்படி, பும்ரா இன்று தன் காயம் குறித்து ஸ்கேன் செய்வதற்காக பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு அவருடைய காயம் குறித்து ஆராயப்பட்டு அறிக்கைகள் வெளிவரும் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் இதன் மூலமாகவே அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் களம் இறங்குவாரா? என்பதும் முடிவாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியதாவது, இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் பும்ரா இடம் பெறாததற்கு காரணம் அவருக்கு ஐந்து வாரம் ஓய்வு கொடுக்கப்பட சொன்னதால் தான். நாங்கள் மருத்துவ குழுவிடமிருந்து அவருடைய உடல்நிலை குறித்த அறிக்கைக்காக காத்து கொண்டுள்ளோம்.

பிப்ரவரி தொடக்கத்தில் மருத்துவக் குழுவிலிருந்து அவரது நிலையை அறிந்து கொள்வோம். அதன் பின்னர்தான் அவரது காயம் குறித்து மேலும் என்ன நிலவரம்? என்பது நமக்கு முழுமையாக தெரியவரும். இதிலிருந்து தான் நாம் மேற்கொண்டு அவர் விளையாடுவாரா? இல்லையா? என்கின்ற முடிவுக்கு வர முடியும். இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article