
துபாய்,
சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ந் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதற்காக 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்களுக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பயிற்சி போட்டியில் விளையாடவில்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 5 அணிகள் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றன.
இந்தியா ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியதாலும், ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாடி வருவதாலும் பயிற்சி ஆட்டங்களில் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பயிற்சி ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி பாகிஸ்தான் ஷாகீன்ஸ் என்ற பெயரில் 3 அணிகளாக களமிறங்குகிறது. அதன்படி இன்று நடக்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஷதாப் கான் தலைமையில் பாகிஸ்தான் ஷாகீன்ஸ் களமிறங்குகிறது.
அதனை தொடர்ந்து 17-ந் தேதி நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முகமது ஹுரைராவும், துபாயில் நடைபெறும் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் முகமது ஹாரிஸும் பாகிஸ்தான் ஷாகீன்ஸ் கேப்டனாக செயல்படுவார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பயிற்சி போட்டி அட்டவணை விவரம்:
பாகிஸ்தான் ஷாகீன்ஸ் - ஆப்கானிஸ்தான்: பிப்ரவரி 14, லாகூர்
நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான்: பிப்ரவரி 16, கராச்சி
பாகிஸ்தான் ஷாகீன்ஸ் - தென் ஆப்பிரிக்கா: பிப்ரவரி 17, கராச்சி
பாகிஸ்தான் ஷாகீன்ஸ் - வங்காளதேசம்: பிப்ரவரி 17, துபாய்