மும்பை,
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் கே.எல். ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ள வேளையில், சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் சமீப காலமாக நல்ல பார்மில் இருக்கும் சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனாலும் அவருக்கு பதிலாக ரிஷப் பண்டுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு ரசிகர்களிடம் பெரிய ஆதரவு மற்றும் அனுதாபம் இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனால் இடது கை பேட்ஸ்மேனாக இருக்கும் ரிஷப் பண்ட் அவரை விட சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் ஆட்டத்தை மாற்றக்கூடியவர் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். அதனாலேயே சாம்பியன்ஸ் டிராபி அணியில் சாம்சனை அவர் முந்தியுள்ளதாக கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு:- "சஞ்சு சாம்சனை தேர்ந்தெடுக்காதது மிகவும் கடினமானது. அவரை தேர்ந்தெடுக்காததற்கு எந்த காரணமும் இல்லை. ஆனால் அவர் ரிஷப் பண்ட்டுக்கு எதிராக போட்டியிட்டார். எப்போதும் ஆட்டத்தை மாற்றக்கூடியவரான அவர் இடது கை பேட்ஸ்மேன் என்பதுடன் சிறந்த விக்கெட் கீப்பர். அதே சமயம் சாம்சனை விட அவர் சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது. ஆனால் சாம்சனை விட ரிஷப் பண்ட் போட்டிகளை அதிகமாக மாற்றும் தன்மை கொண்டவர். அதனாலேயே சாம்சன் இந்திய அணியில் இடம் பெறவில்லை.
அதற்காக சாம்சன் சோகமாக உணர வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இந்திய கிரிக்கெட்டின் அனைத்து ரசிகர்களும் அவர் மீது அனுதாபத்தை கொண்டுள்ளனர். மேலும் அவர் சாதித்துள்ள விஷயங்களுக்காக ரசிகர்கள் எப்போதும் பாராட்டுவார்கள்" என்று கூறினார்.