![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38294283-4-nz-crick-icc.webp)
வெல்லிங்டன்,
இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் தற்போது இந்த தொடரில் கலந்து கொள்வாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இவர் தற்போது துபாயில் நடைபெற்று வரும் ஐ.எல்.டி20 லீக்கில் டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இவர் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் விளையாடும் போது அவருக்கு தொடையில் தசைநார் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் போட்டியில் இருந்து உடனடியாக வெளியேறினார். தொடந்து நேற்று நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டம் இரண்டில் அவர் டெசர்ட் அணிக்காக களம் இறங்கவில்லை.
இதன் காரணமாக அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள லாக்கி பெர்குசன் ஒரு வேளை தொடரில் இருந்து விலகினால் அது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.