சாம்பியன்ஸ் டிராபி; காயத்தால் விலகும் பேட் கம்மின்ஸ்... ஆஸி. அணியின் புதிய கேப்டன் யார்..?

2 hours ago 1

கான்பெர்ரா,

8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.

இந்த தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் அந்த அணியில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் வருகிற 11-ஆம் தேதிக்குள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று ஐ.சி.சி. கெடு விதித்திருக்கிறது. இதன் காரணமாக அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணியில் காயமடைந்துள்ள வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த பேட் கம்மின்ஸ் இந்த தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கம்மின்ஸ்க்கு கனுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளார். மேலும், ஜோஷ் ஹேசில்வுட் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் அவர் பங்கேற்பதிலும் சிக்கல் நிலவுகிறது.

இந்நிலையில், பேட் கம்மின்ஸும் இந்த தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுவதால் ஆஸ்திரேலிய அணிக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த தொடரில் கம்மின்ஸ் பங்கேற்காவிட்டால் ஆஸ்திரேலிய அணியை முன்னணி வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் அல்லது டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரில் ஒருவர் வழிநடத்துவார் என கூறப்படுகிறது.

Read Entire Article