
லாகூர்,
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை உச்சி முகர்ந்தது.
முன்னதாக இந்த தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது.
ஆனால் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடி கோப்பையை வென்று விட்டதாக பல முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
இந்நிலையில் துபாயில் மட்டுமல்ல எங்கு விளையாடி இருந்தாலும் இந்தியாதான் கோப்பையை வென்றிருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் இந்த குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். பல தரப்பட்ட மக்களும் இந்தியா ஒரே மைதானத்தில் விளையாடுகிறது, இது இந்தியாவுக்கு சாதகத்தை கொடுக்கிறது என பேசுகிறார்கள். நான் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தியா துபாயில் அல்ல, வேறு எந்த மைதானத்தில் போட்டியை வைத்திருந்தாலும் இதே மாதிரிதான் வெற்றி பெற்றிருக்கும். பாகிஸ்தானில் விளையாடி இருந்தாலும் இந்தியாதான் கோப்பையை கைப்பற்றி இருக்கும்.
2024 டி20 உலக கோப்பையை இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் இதே மாதிரிதான் வெற்றி பெற்றது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்தியா அதே போல் ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் இந்திய அணியில் எவ்வளவு திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய கேப்டனின் தலைமை பண்பு எப்படி இருக்கிறது என்பதை இந்த வெற்றி காட்டுகிறது.
நியூசிலாந்துக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவியது. இதனை நீங்கள் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். அதன் பிறகு பார்டர் - கவாஸ்கர் தொடரிலும் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது. இதன் மூலம் பயிற்சியாளர் கம்பீரையும் கேப்டன் ரோகித் சர்மாவையும் பதவி விட்டு நீக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி குரல்களை எழுப்பினர்.
ஆனால் பி.சி.சி.ஐ. இவர்கள்தான் எங்களின் பயிற்சியாளர். இவர்தான் எங்களுடைய கேப்டன். இவர்களை மாற்ற முடியாது என கூறி அவர்களுக்கு முழு ஆதரவையும் வழங்கியது. அவசரம் காட்டாமல் பொறுமையை கடைபிடித்தது. அந்த பொறுமைக்கு கிடைத்த வெற்றிதான் இது" என்று கூறினார்.