
துபாய்,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டது.
8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் லீக் சுற்றை தாண்டவில்லை.
இந்த நிலையில் ஐ.சி.சி. மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இந்தியா- நியூசிலாந்து இடையிலான இறுதிப்போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி, ஒரே ஒரு லீக் ஆட்டத்தில் மட்டும் தோல்வி கண்ட நியூசிலாந்தை (இந்தியாவுக்கு எதிராக), வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.
அதேவேளையில், லீக் ஆட்டத்தில் இந்திய அணியிடம் அடைந்த தோல்விக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக நியூசிலாந்து கடுமையாக போராடும். இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில், இந்த தொகுப்பில் இரு அணிகளின் பலம், பலவீனம் குறித்து பார்க்கலாம்.
இந்தியா:
நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காக அணி என்றால் அது இந்தியாதான். லீக் சுற்றில் (3 வெற்றி) வங்காளதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளை வீழ்த்திய இந்தியா, அரையிறுதியில் உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது.
இந்த தொடரில் இந்திய அணியின் பலமே அவர்களது சுழற்பந்து வீச்சுதான். இந்த தொடருக்கு முன் இந்திய அணியில் ஏன்? 5 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர் என கேள்வி எழுப்பியவர்களுக்கு சுழற்பந்து வீச்சு மூலமே தக்க பதிலடி கொடுத்துள்ளது இந்தியா.
அதிலும் குறிப்பாக முதல் இரு லீக் போட்டிகளில் களம் இறக்கப்படாத வருண் சக்கரவர்த்தி நியூசிலாந்து (5 விக்கெட்), ஆஸ்திரேலியா (2 விக்கெட்) ஆட்டங்களில் தனது அபார திறமையை வெளிப்படுத்தி உள்ளார். மறுபுறம் ஆல்ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் ஜொலித்து வருகின்றனர். அதேபோல குல்தீப் யாதவும் தக்க சமயத்தில் பார்முக்கு திரும்பி உள்ளார். இவர்கள் 4 பேரின் பந்துவீச்சு தான் இந்திய வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
பேட்டிங்கில் கே.எல். ராகுலுக்கு முன்னர் அக்சர் படேல் ஏன்? களம் இறக்கப்படுகிறார் என்ற கேள்விக்கு அக்சர் படேல் பேட்டிங்கில் தனது திறமையை வெளிப்படுத்தி பதில் கொடுத்துள்ளார். இந்தியா தற்போது வரை ஆடியுள்ள 4 ஆட்டங்களையும் சேர்த்து 21 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தி உள்ளனர். அதனால் இந்திய அணியின் மிகப்பெரிய பலமாக சுழற்பந்து வீச்சு காணப்படுகிறது.
இந்திய அணியின் பலவீனம் என்றால் அது வேகப்பந்து வீச்சுதான். இந்த தொடருக்காக இந்திய அணியில் இடம் பிடித்திருந்த முன்னணி வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா காயம் காரணமாக கடைசி நேரத்தில் இந்த தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக இளம் வீரர் ஹர்ஷித் ராணா அணியில் இடம் பிடித்தார்.
முதல் இரு ஆட்டங்களில் ஆடிய ஹர்ஷித் ராணா மொத்தம் 4 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தினார். இதையடுத்து கடைசி லீக் ஆட்டத்தில் அவருக்கு பதிலாக இடம் பிடித்த வருண் சக்கரவர்த்தி அந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது இடத்தை தக்க வைத்து கொண்டார். மறுபுறம் காயத்தில் இருந்த மீண்ட முகமது ஷமி வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் அவர் பார்முக்கு திரும்பினார் என எதிர்ப்பார்க்கப்பட்ட வேளையில் அடுத்த ஆட்டங்களில் விக்கெட் எடுக்க தடுமாறினார். தற்போது இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 4 சுழற்பந்து வீச்சாளர்களை இந்தியா பயன்படுத்தி வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்த 4 (சுழல்) + 2 (வேகம்) வியூகமே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் ஷமி அல்லது ஹர்த்திக் பாண்ட்யா இருவரில் ஒருவர் அதிக ரன் கொடுக்க நேரிட்டால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.
பேட்டிங்கை பொறுத்தவரை விராட், ஸ்ரேயாஸ், கே.எல். ராகுல், அக்சர் படேல் நல்ல பார்மில் உள்ளனர். மறுபுறம் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த பின் ரன் எடுக்க தடுமாறும் துணை கேப்டன் சுப்மன் கில் இன்று ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மறுபுறம் அதிரடி காட்டும் ரோகித் சர்மா நிதானமாக ஆடி ரன் குவித்தால் இந்திய பேட்டிங் வரிசை மேலும் பலம் பெறும். ஆல்ரவுண்டர்களாக ஜடேஜாவும், பாண்ட்யாவும் பேட்டிங்கில் தங்களது பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
நியூசிலாந்து:
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக புதிய கேப்டன் மிட்செல் சான்ட்னெர் தலைமையில் களம் கண்ட நியூசிலாந்து லீக் சுற்றில் 2 வெற்றி (பாகிஸ்தான், வங்காளதேசம்), 1 தோல்வி (இந்தியா) கண்டு தனது பிரிவில் 2வது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய நியூசிலாந்து 362 ரன்களை குவித்து அசத்தியது.
அரையிறுதியில் 50 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து இந்திய அணிக்கு அனைத்து வகையிலும் சவால் கொடுக்கும் அணியாகவே திகழ்கிறது. நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய பலமே அந்த அணியின் பேட்டிங் தான். அந்த அணியில் பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளனர்.
இந்த நால்வரில் ஒருவர் நிலைத்து நின்று ஆடினால் கூட நியூசிலாந்து மிகப்பெரிய ஸ்கோரை அடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பந்து வீச்சில் தோள்பட்டை காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி களம் காண்பது சந்தேகம் தான். இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றபடி நியூசிலாந்து பந்துவீச்சை பொறுத்தவரையில் இந்தியாவை போலவே 4 சுழற்பந்து வீச்சாளர்கள் (சான்ட்னெர், பிரேஸ்வெல், பிலிப்ஸ், ரவீந்திரா) இடம் பெறுவார்கள் என கருதலாம். நியூசிலாந்தின் வேகப்பந்து கூட்டணியில் ஹென்றி இடம் பெறாதபட்சத்தில் அந்த அணியின் பலவீனமாக வேகப்பந்து வீச்சு இருக்கும் எனலாம்.
ஏனெனில், வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை கைல் ஜேமிசன், வில்லியம் ஓ ரூர்க், ஜேக்கப் டப்பி, நாதன் சுமித் உள்ளிட்ட இளம் வீரர்களை நம்பியே நியூசிலாந்து உள்ளது. வேகப்பந்து வீச்சில் நியூசிலாந்து செயல்படும் விதத்தை பொறுத்துதான் அந்த அணியின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும் எனலாம். மற்றபடி நியூசிலாந்து அணியின் பீல்டிங் மிகச்சிறப்பாக உள்ளது.
மொத்தத்தில் இந்தியாவின் சுழலுக்கும், நியூசிலாந்தின் பேட்டிங்குக்கும் இடையிலான மோதலாக இது பார்க்கப்படுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.