புதுடெல்லி,
இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.
இதில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இப்போதே ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம் பெறாது என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக போட்டியை நடத்தும் நாட்டின் பெயர் அந்த அந்த அணி வீரர்கள் அணியும் ஜெர்சியில் இடம் பெற்றிருக்கும்.
ஆனால், துபாயில் ஆடும் இந்திய அணி வீரர்களின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் பொறிக்கப்படாது என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.