
சிட்னி,
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அதிலும் குறிப்பாக தோல்வியே சந்திக்காமல் வெற்றி பெற்று அசத்தியது. இதனால் இந்திய அணியை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். கடைசியாக 2013-ம் ஆண்டு தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா, தற்போது ரோகித் தலைமையில் மீண்டும் வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு என்ன காரணம்? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இந்திய அணி இந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்ற தரமான ஆல் ரவுண்டர்கள் இருந்ததே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் அனைவருமே இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக ஆல்ரவுண்டர்கள் இந்த தொடரில் அற்புதமாக செயல்பட்டனர். ஜடேஜா, அக்சர் படேல், ஹர்திக் பாண்ட்யா போன்ற அனுபவமும் இளமையும் வாய்ந்த ஆல் ரவுண்டர்கள் இருந்ததால் இந்திய அணியின் பலம் அதிகரித்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கை கொடுக்கும் அந்த மூன்று பேர் இருந்தது இந்திய அணியின் ஆழத்தை அதிகரித்ததோடு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றவும் மிக முக்கியமான காரணமாக மாறியது" என்று கூறினார்.