
மும்பை,
8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர்வரும் 19-ம் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. 19-ந்தேதி கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க உள்ளது. அதில் முன்னணி வீரர்களான விராட் கோலி, ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோருடன் இளம் வீரர்களான சுப்மன் கில், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியில் அனைத்தும் நன்றாக இருப்பது போல் வெளிப்பார்வைக்கு மட்டுமே தெரிவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஆனால் நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் இந்தியாவின் பவுலிங் துறை பலவீனமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதனால் டாஸ் வென்றால் துபாயில் இந்தியா முதலில் பவுலிங் செய்து பின்னர் சேசிங் செய்வதே வெற்றி பெறுவதற்கான வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "உங்களுடைய பலம் எதுவோ அதை நீங்கள் இரண்டாவதாக செய்ய வேண்டும் என்று ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு விதிமுறை இருக்கிறது. அதன் படி உங்களுடைய பவுலிங் நன்றாக இருந்தால் அதைப் பின்னர் செய்யுங்கள். உங்களது பேட்டிங் நன்றாக இருந்தால் அதைப் பின்னர் செய்யுங்கள். அந்த வகையில் இந்த இந்திய அணியில் பேட்டிங் நன்றாக இருக்கிறது.
நமது பந்து வீச்சில் 5 ஸ்பின்னர்கள் மற்றும் நிறைய வேரியசன்கள் இருப்பதாக நாம் சொல்கிறோம். ஆனால் நாம் நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் நமது பந்து வீச்சில் பிரச்சினை இருக்கிறது. பேட்டிங்தான் நம்முடைய பலம். அதனால் போட்டியை வென்று கொடுக்கக்கூடிய அழுத்தம் பேட்ஸ்மேன்கள் மீது இருக்கும். எனவே கண்டிப்பாக இந்தியா இரண்டாவதாக பேட்டிங் செய்ய வேண்டும்.
அதற்காக நீங்கள் டாஸ் வென்றால் முதலில் பவுலிங் செய்ய வேண்டும். பனியால் ஏற்படும் தாக்கமும் ஆபத்தும் இரண்டாவது இன்னிங்சில்தான் இருக்கும். அப்போது நீங்கள் பேட்டிங்தான் செய்ய வேண்டும். கையில் பந்தை வைத்திருக்க கூடாது. இந்தியா கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் சேசிங் செய்ய வேண்டும். அதுவும் துபாயில் முதலில் பேட்டிங் செய்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை" என கூறினார்.