
மும்பை,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 252 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் இந்திய அணி கில், விராட், ரோகித் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்ததால் நெருக்கடிக்கு உள்ளானது. அங்கிருந்து போட்டியை எடுத்து செல்ல யாராவது ஒரு பேட்ஸ்மேன் பொறுப்புடன் விளையாட வேண்டும் நிலை ஏற்பட்டது. அந்த வேலையை ஸ்ரேயாஸ் ஐயர் கச்சிதமாக செய்து முடித்தார். இந்த ஆட்டம் மட்டுமின்றி தொடர் முழுவதுமே அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரில் அதிக ரன் (243 ரன்கள்) குவித்த இந்திய வீரராக சாதனை படைத்தார். மேலும் இந்த தொடரில் அதிக ரன் குவித்த 2-வது வீரராகவும் சாதனை படைத்தார்.
இந்நிலையில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியும் அவரால் ஒரு ஆட்டநாயகன் விருதினை கூட வெல்ல முடியாதது தனக்கு வருத்தமாக இருந்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் பார்மை பார்த்து ஆச்சரியப்படுகிறேன். ஏனெனில் அவர் தற்போது டெஸ்ட் மற்றும் டி20 அணியில் இடம் பெறவில்லை என்றாலும் ஒருநாள் போட்டியில் மட்டுமே இடம்பிடித்து விளையாடுகிறார். ரஞ்சி தொடரில் மும்பை அணிக்காக விளையாடிவிட்டு நேரடியாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது என்பது சாதாரணம் கிடையாது. அப்படி விளையாடும்போதும் அவரால் எளிதாக பவுண்டரிகளை அடிக்க முடிவதோடு உடனடியாக அதிரடியாகவும் விளையாட முடிகிறது.
இந்த தொடரில் இந்திய அணியின் இன்னிங்சை அவர் வலுவாக கொண்டு சென்றதில் மிக முக்கிய பங்கு வகித்தார். பலவீரர்கள் இந்திய அணிக்கு 4வது இடத்தில் வருவதும், போவதுமாக இருந்த வேளையில் அவர் அந்த இடத்தினை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இந்த தொடரில் 2-வது அதிகபட்ச ரன் குவித்த அவர் ஒரு போட்டியில் கூட ஆட்டநாயகன் விருதினை வெல்ல முடியவில்லை என்பது எனக்கு வருத்தம்தான்" என்று கூறினார்.