
மும்பை,
8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர்வரும் 19-ம் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. 19-ந்தேதி கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க உள்ளது. அதில் முன்னணி வீரர்களான விராட் கோலி, ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோருடன் இளம் வீரர்களான சுப்மன் கில், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்த இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. எனவே சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது.
மேலும் தங்களது கெரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் முன்னணி வீரர்களான ரோகித், விராட், ஜடேஜா ஆகியோர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மூவரும் ஏற்கனவே சர்வ்சதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபிதான் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய 3 நட்சத்திர வீரர்கள் ஒன்றாக விளையாடப் போகும் கடைசி ஐ.சி.சி. தொடர் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு:- "இதை கனத்த இதயத்துடன் சொல்கிறேன். இதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி விரைவில் தொடங்க உள்ளது. அதன் பின் இந்த வருடத்தில் மற்றும் ஒரு ஐ.சி.சி. தொடர் நடைபெறுகிறது. அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி. ஆனால் நாம் அதற்கு தகுதி பெறவில்லை. எனவே விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதில் விளையாடப் போவதில்லை.
அதன் பின் அடுத்த வருடம் (2026) டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது. ஆனால் அந்த பார்மெட்டில் அவர்கள் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்கள் என்பதால் விளையாட மாட்டார்கள். ஒருநாள் உலகக்கோப்பை (2027) இன்னும் வெகு தூரத்தில் இருக்கிறது. 2027-ம் ஆண்டு உலகம் வித்தியாசமாக இருக்கும். எனவே அந்த 3 வீரர்களுக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபிதான் கடைசி ஐ.சி.சி. தொடர் என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.