மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் துணை கேப்டனாக சுப்மன் கில்லும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக கேஎல் ராகுல், ரிஷப் பன்ட் தேர்வாகி உள்ளனர். எனினும் முகமது சிராஜ், ஜெய்ஸ்வால் இந்த தொடரில் இடம் பெறாதது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது: ரோகித் சர்மா, கில் இருக்கும் போது ஜெய்ஸ்வால் எதற்கு அணியில் இருக்கிறார் என்று பலர் கேட்கிறார்கள். ஆனால் ஜெய்ஸ்வால் கடந்த 18 மாதங்களாக இந்திய அணியின் ஸ்டார் வீரராக இருக்கிறார். அதிக அளவு ரன்கள் சேர்க்கிறார். இதனால் ஜெய்ஸ்வால் கண்டிப்பாக அணியில் இடம்பெறுவது அவசியம்.
என்னை கேட்டால் ரோகித் சர்மாவும் ஜெய்ஸ்வாலும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். இதன் மூலம் இடதுகை, வலதுகை பேட்ஸ்மேன்கள் இடம்பெறுவார்கள். கில் 3வது வீரராகவும் விராட் கோஹ்லி 4வது வீரராகவும், 5வது இடத்தில் கே.எல்.ராகுல் அல்லது பன்ட் இருவரில் ஒருவர் மட்டும் களமிறங்கவேண்டும். 6வது இடத்தில் ஹர்திக் பாண்டியாவும், 7வது இடத்தில் அக்சர் அல்லது ஜடேஜா என இருவரில் ஒருவர் விளையாட வேண்டும். 8வது வீரராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை சேர்க்க வேண்டும். இதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாகும். அதேபோன்று மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஆர்ஸ்தீப் சிங், முகமது சமி மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கில் எனக்கு மாமனா, மச்சானா?
அஸ்வின் மேலும் கூறுகையில், “முகமது சிராஜ் அணியில் இல்லாதது தமக்கு பல கேள்விகளை எழுப்பி உள்ளது. ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிராஜ் பிரமாதமான வீரர் என்றும் அவர் சமீபகாலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி விளையாடினார் என்பதை பார்த்து ஒரு நாள் கிரிக்கெட் தொடர்பாக முடிவு எடுக்கவேண்டாம். கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதற்கு தான் அஸ்வின் ஆதரித்ததை எதிர்த்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அஸ்வின், “எனக்கு கில் எனக்கு மாமனா மச்சானா அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் பல ரெகார்டுகளை வைத்திருக்கிறார். நன்றாக விளையாட கூடியவர் எனவே இது சரியான முடிவாக இருக்கும்’’ என்றார்.
The post சாம்பியன் டிராபி தொடர்: ஜெய்ஸ்வால் அணியில் இடம்பெறுவது அவசியம்.! ரவிச்சந்திரன் அஸ்வின் சொல்கிறார் appeared first on Dinakaran.