சென்னை: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்ததாக அரசு அறிவித்துள்ளது. அதே நேரம், பேரவைக்கூட்டத்துக்குப்பின் நல்ல முடிவு எட்டப்படும் என சிஐடியு மாநில தலைவர் சவுந்திரராஜன் தெரிவி்த்துள்ளார்.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்.9ம் தேதி முதல் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தப் பேரில், அமைச்சர்கள் குழுவினர் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சு வார்த்தையின் பயனாக சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களின் நலனைக் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, நேற்று இரவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பின், அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிர்வாகத்தரப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தப் பேச்சு வார்த்தையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.