சென்னை: சாம்சங் துணை நிறுவனத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை தவிர பிற போராட்டங்களை வரும் 30-ம் தேதி நடத்திக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் துணை நிறுவனமான எஸ்எச் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 91 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு செயலாளர் முத்துக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதி இல்லை என ஏற்கெனவே நீதிபதி தெரிவித்திருந்தார்.