சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்

3 months ago 19

சென்னை : சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை, தமிழ்நாடு தொழிலாளர் துறை உடனடியாக பதிவு செய்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு இந்தியாவில் நொய்டாவிலும் காஞ்சிபுரத்திலும் ஆலைகள் உள்ளன.காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சுமார் 1800க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.வாஷிங் மெஷின், குளிர்பதனப் பெட்டி, தொலைக்காட்சி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை சாம்சங் இந்தியா நிறுவனம் தயாரித்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம், இந்நிறுவனத்தில் சி.ஐ.டி.யு (இந்திய தொழிற்சங்க மையம்) சார்பில் சங்கம் ஒன்றைத் தொடங்குவதற்கு தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.இதற்கு சாம்சங் இந்தியா நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து தொழிற்சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் நடந்து வரும் போராட்டத்தால், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சுமார் 60 சதவீதம் அளவுக்கு மட்டுமே உற்பத்தி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக் நிறுவனத் தொழிலாளர்கள் 4-வது வாரமாக, வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். 1500 தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்த வேலை நிறுத்தம் முடிவு காண வேண்டுமெனில் தமிழக அரசு மேலும் கூடுதல் தலையீடு செய்து, தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.தொழிலாளர் துறை அமைச்சர், துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு 5 முறை பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளது. ஆனால், உடன்பாடு எதுவும் காணப்பட வில்லை.

தமிழ்நாடு அரசு சாம்சங் இந்தியா நிறுவனத்திற்கு அறிவுறுத்தல் வழங்கி தொழிற்சங்கம் முன் வைத்திருக்கும் கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும்; தொழிலாளர்களின் முக்கியக் கோரிக்கையான, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை, தமிழ்நாடு தொழிலாளர் துறை உடனடியாக பதிவு செய்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள் appeared first on Dinakaran.

Read Entire Article