
தமிழ் சினிமாவில் பன்முக திறமை வாய்ந்தவர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் கே.பாக்யராஜ். இவரின் மகனான சாந்தனு குழந்தை நட்சத்திரமாக பாக்யராஜ் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சக்கரக்கட்டி என்ற படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் தனக்கென தனியிடம் கிடைக்க போராடி வருகிறார். வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களாக இருந்தாலும் நீண்ட ஆண்டுகளாகவே வெற்றி என்ற ஒன்று கிடைக்காமல் இருந்தது. சக்கரக்கட்டி படத்தை தொடர்ந்து அவர் ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி, மாஸ்டர், ராவணக்கோட்டம் என ஏராளமான படங்களில் நடித்திருந்தார்.
இவர் கடைசியாக அசோக் செல்வன் உடன் இணைந்து ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் மலையாளத் திரை உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஷேன் நிகாம். இவர் தமிழில் மெட்ராஸ்காரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் சாந்தனு மற்றும் ஷேன் நிகாம் ஆகியோர் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கின்றனர். இந்த படத்தினை எஸ்டிகே பிரேம்ஸ் நிறுவனமும் ஜார்ஜ் பி அலெக்சாண்டர் புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தினை உன்னி சிவலிங்கம் இயக்குகிறார்.
இந்த படத்தில் சாந்தனு மற்றும் ஷேன் நிகாம் ஆகியோருடன் இணைந்து அயோத்தி பட நடிகை பிரீத்தி அஸ்ராணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை நேற்று சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் சாந்தனு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.