திமுக-வில் இனி வரும் காலம் உதயநிதியின் காலமாகத்தான் இருக்கும் என்பதால் திமுக முக்கிய தலைகள் பலரும் தங்களுக்குப் பதிலாக தங்களது வாரிசுகளை முன்னிறுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அண்ணாச்சியும் தனது மகன் ரமேஷை 2026 சட்டப் பேரவை தேர்தலுக்கு தயார்படுத்தி வருகிறார்.
சாத்தூர் ராமச்சந்திரன் என அழைக்கப்படும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்ஜிஆர் அமைச்சரவையில் இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்தவர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக நின்றார். ஆனால், ஒருகட்டத்தில் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் திருநாவுக்கரசர் தொடங்கிய எம்ஜிஆர் அண்ணா திமுக-வில் இணைந்தார். பிறகு திமுக-வில் இணைந்த ராமச்சந்திரனுக்கு 2006-ல் போட்டியிட வாய்ப்பளித்த கருணாநிதி, அவரை சுகாதாரத்துறைக்கு அமைச்சராக்கினார்.