*கல்வி அதிகாரி, போலீசார் பேச்சுவார்த்தை
சாத்தான்குளம் : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே புளியங்குளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 69க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இங்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் நாசரேத்தில் இருந்து வரும் ஆசிரியர் ஒருவர் நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கு பாடம் எடுத்து வருகிறார்.
இவர் பள்ளிக்கு தாமதமாக வருவதாகவும், மாணவர்களை அவதூறாக பேசுவதாகவும் கூறப்படுகிறது. இதனையறிந்த பெற்றோர்கள், அவரது நடவடிக்கை குறித்து தலைமை ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் கல்வி அதிகாரிகள் மாற்றுப் பணியில் வேறு பள்ளிக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் மீண்டும் அதே பள்ளியில் பணியாற்ற அனுப்பியுள்ளனர்.
மீண்டும் பள்ளிக்கு வந்த ஆசிரியர், குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் காலதாமதமாக வருவதுடன், மாணவர்களை துன்புறுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்வி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து, ஆசிரியரை பணியிடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் எந்த நடவடிக்கை எடுக்கப்படாததால், தாங்கள் ஆசிரியரால் மனரீதியாக பாதிக்கப்படுவதாக கூறி பெற்றோர்கள், அந்த ஆசிரியர் பணிபுரிந்தால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக்கூறி நேற்று மாணவர்களுடன் பள்ளி வளாகத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புகார் கூறப்பட்ட ஆசிரியரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதுடன் அவரை வேறு பள்ளிக்கு பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
தகவலறிந்து ஆழ்வார்திருநகரி வட்டார கல்வி அலுவலர் கமலா, சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு வனசுந்தர் ஆகியோர் வந்து பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புகார் கூறப்பட்ட ஆசிரியர், ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என உறுதியளித்து அதற்கான ஆர்டர் காப்பியை வட்டார கல்வி அலுவலர் காட்டினார்.
இதையடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு மாணவர்களை பள்ளிக்கு அனுப்பினர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. புளியங்குளம் பள்ளியில் ஆசிரியரை கண்டித்து பெற்றோர்கள் போராட்டம் நடத்திய போது, புகார் கூறப்பட்ட ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post சாத்தான்குளம் அருகே அரசு பள்ளி ஆசிரியரை மாற்றக்கோரி பெற்றோர்கள் திடீர் போராட்டம் appeared first on Dinakaran.