சென்னை: ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி 13 உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. சென்னையில் அண்ணாசாலை தாராப்பூர் டவர், பிராட்வே பேருந்து நிலையம், எல்.ஐ.சி, கிண்டி பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், மின் துறை ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் திரண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டம் குறித்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய தொழிற்சங்கங்களின் அறைக்கூவலை ஏற்று இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
நிதித்துறை, வங்கி துறை, எல்.ஐ.சி பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தொழிலாளர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு பொருளாதார கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது. மோடி அரசு ஒரு சில வசதி படைத்தவர்களுக்கு மட்டும் சாதகமாக உள்ளது. ஆனால், அது தொழிலாளர்களுக்கு பாதகமாக அமைகின்றன. விலைவாசி கட்டுப்படுத்தாமல் வேலை இல்லாத திண்டாட்டம் அதிகமாகியுள்ளது. தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. தொழிற்சங்கங்களுக்கு எதிராக ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுகளை எதிர்க்கின்றோம். இந்தியா வளர்ச்சிப்பெற்ற நாடாக மாறவேண்டும் என்றால், மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் இருக்க வேண்டும். தொழிலாளர்கள் தான் இந்தியாவை பொருளாதார நாடாக, வல்லரசாக மாற்ற முடியும்.
எனவே தொழிலாளர்கள் கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றாலும், பொதுமக்களுக்கு எந்த வித தடைகளும் இன்றி பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல் ஆட்டோக்கள் பெரும்பாலும் இயக்கப்பட்டன. வணிகர் சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சென்னையில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்: பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின appeared first on Dinakaran.