திருவண்ணாமலை,
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சாத்தனூர் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து 2,500 கன அடியாக உள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணையின் நீர்வரத்துக்கு ஏற்ப நீர் வெளியேற்றம் படிப்படியாக மேலும் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்பெண்ணையாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.