![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38986069-10.webp)
ஒரு நாட்டில் மாநில வாரியாக மக்கள்தொகை எவ்வளவு இருக்கிறது? என்று கணக்கிட்டால்தான், அதற்கேற்ற வகையில் திட்டங்களை வகுக்க முடியும். அதுபோல, "சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா மேதினியில் இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி" என்ற நீதி மொழியை சொன்னாலும், இந்தியாவில் சாதி வேறுபாடு தலை விரித்து ஆடுவதை யாராலும் மறுக்க முடியாது.
சாதி வேறுபாடற்ற சமுதாயம் அமையவேண்டும் என்று சொன்னாலும், அதற்கான இலக்கு அருகே தெரியவில்லை. இன்னும் அதனை எட்டுவதற்காக நீண்டதூரம் போகவேண்டும். கடைசியாக நடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் 2,650 சாதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 377 சாதிகள் இருப்பதாக ஒரு தகவல் உள்ளது. இடஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், ஒவ்வொரு சாதியை சேர்ந்த தலைவர்களும், எங்கள் சாதியில் இவ்வளவு பேர் இருக்கின்றனர் என்று கூறி, அதற்கேற்ப இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், அரசிடமோ, ஒவ்வொரு சாதியினரும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற துல்லியமான கணக்கு இல்லாததால், இடஒதுக்கீட்டில் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். ஒருமுறை, சாதி தலைவர்களை அழைத்து நடத்திய ஆலோசனையில், அவர்கள் சொன்ன கணக்கையெல்லாம் கூட்டிப்பார்த்தால், தமிழக மக்கள்தொகையைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது என்று கூறினார். எனவே, உத்தேச கணக்குகளை வைத்து இடஒதுக்கீட்டு பிரச்சினையில் ஒரு முடிவு எடுக்க முடியாது. அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு நடந்தால்தான் இதில் தீர்வு கிடைக்கும். இத்தகைய சூழ்நிலையில், நாடு முழுவதும் 'சென்சஸ்' என்று கூறப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு உரிய காலத்தில் நடத்தப்படாமல் கால தாமதமாகிக் கொண்டிருக்கிறது.
மக்கள்தொகை தொடர்பான முதல் கணக்கெடுப்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1881-ம் ஆண்டு நடந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1951-ம் ஆண்டு நடந்தது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற வகையில், 2011-ம் ஆண்டு வரை சரியாக நடந்துவந்தது. 2021-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனா காரணமாக நடக்கவில்லை. இந்த நிலையில், 2026-ல் தொகுதி வரையறை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதால், அதற்கு முன்னதாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியாகவேண்டும். எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பையும், அதோடு தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிப்பு பணிகளையும் ஒரே நேரத்தில் இந்த ஆண்டில் மிக விரைவில் ஆரம்பிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் பணிகள் முடிய ஓராண்டு ஆகும்.
2026-ம் ஆண்டுதான் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தொகுதி வரையறை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் ஒட்டுமொத்த மக்களும், அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரலில் கோரிக்கையாக விடுவது, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்பதுதான். ஏனென்றால், சாதிவாரி கணக்கெடுப்பை தனியாக நடத்துவது என்பது இயலாத காரியம். மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக பதிவாளர் ஜெனரலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு கமிஷனரும் சேர்ந்து மக்களிடம் கேட்க 31 கேள்விகளை தயாரித்து இருக்கிறார்கள். இதோடு ஓரிரு கேள்விகளை கூடுதலாக கேட்டால் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளும் சேர்ந்தே முடிந்துவிடும். எனவே, ஒரு சாதகமான முடிவை மத்திய அரசாங்கம் எடுத்து அறிவிக்கவேண்டும்.