
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகளான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த அமைச்சரவையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த நிலையில் அமைச்சரவையில் எடுத்த முடிவுகளை டெல்லியில் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு விவரித்தார்.
இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, "அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அளவில் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அவசியமில்லை. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரியாக கணக்கெடுப்பு நடைபெறும். சாதிவாரி கணக்கெடுப்பு வெளிப்படையாக பதிவு செய்யப்படும்" என்று கூறினார்.