சென்னை: ஜாதிய வன்கொடுமையால் கொலை, இறப்புக்கு ஆளாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் வழங்குக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரவிக்குமார் எம்.பி இன்று அனுப்பிய கடிதத்தில் பின்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்;
இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும் சாதிய வன்கொடுமைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வருகின்றன. இதற்காக இயற்றப்பட்ட சட்டங்களைத் தமிழ்நாடு அரசு திறம்படச் செயல்படுத்துகிறது என்ற போதிலும் இந்த சாதிய வன்முறைகளில் நடைபெறும் கொலை, இறப்பு, பாலியல் வல்லுறவு ஆகியவை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஆதிதிராவிடர் நலத்துறை அளித்த புள்ளிவிவரங்களின்படி 2022 ஆம் ஆண்டில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 64 பேர் கொலை செய்யப்பட்டனர். 2023 இல் 92 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 89 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1989 இன் படி சாதிய வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு ஒன்றிய அரசின் திட்டத்தின் அடிப்படையிலும், மாநில அரசின் நிதி உதவியும் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீருதவி வழங்கப்படுகிறது. ஆனால், அது அந்த குடும்பத்தினருக்குப் போதுமான நிவாரணத்தை அளிப்பதில்லை.
பட்டியல் சமூகக் குடும்பங்களில் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறவர் உயிரிழந்தால் அந்த குடும்பமே சின்னாபின்னமாகி சிதறுண்டு போகிறது. அந்த இழப்பு தலைமுறை தலைமுறையாகப் பாதிக்கிறது. இந்த அவல நிலையைக் கவனத்தில் கொண்டு சாதிய வன்கொடுமைகளில் கொலை, இறப்பு, பாலியல் வல்லுறவு ஆகியவற்றால் பாதிக்கப்படும் பட்டியல் சமூகத்தினருக்கு/ அவர்களது குடும்பத்தினருக்கு மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
2022 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட 64 பேர் தொடர்பான வழக்குகளில் 56 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளதாகவும், 5 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், 3 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டதாகவும் தமிழ்நாடு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, 2023 ஆம் ஆண்டு 92 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளில் 85 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளதாகவும், 3 வழக்குகள் கைவிடப்பட்டதாகவும், ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், 3 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான விவரங்களின் அடிப்படையில் 89 பேர் படுகொலை செய்யப்பட்டதாகவும், அதில் 11 வழக்குகள் புலன் விசாரணை நிலையில் உள்ளதாகவும், 77 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளதாகவும், 1 வழக்கில் நடவடிக்கை கைவிடப்பட்டதாகவும், எந்த வழக்கிலும் இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு தீருதவி வழங்குவதற்குத் தமிழ்நாடு அரசு ஒவ்வோராண்டும் நிதி ஒதுக்கி வருகிறது.
“ வன்கெடுமைத் தடுப்புச் சட்ட விதி 12 (4) இல் பகுத்துரைக்கப்பட்டவாறு கொலை, இறப்பு, பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு விதிகளின்படி அரசு வேலை, ஓய்வுதியம், வீட்டு வசதி போன்ற இதர மறுவாழ்வு குறித்த நிவாரண உதவிகளும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ( மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்துக்காக அளிக்கப்பட்ட அறிக்கை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நாள்: 27.12.2024)
தமிழ்நாடு அரசே வாக்குறுதி அளித்தவாறு கொலை, இறப்பு, பாலியல் வல்லுறவு ஆகிய குற்றங்களால் பாதிக்கப்பட்ட வர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மாதாந்திர ஓய்வூதிய திட்டம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பட்டியல் சமூகத்தினர் பழங்குடியினர் நலனுக்காக பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வரும் தாங்கள் இந்த வேண்டுகோளையும் பரிவோடு பரிசீலித்து எதிர்வரும் பட்ஜெட்டில் அறிவிப்புச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post சாதிய வன்கொடுமையால் கொலை, இறப்புக்கு ஆளாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் வழங்குக: தமிழ்நாடு அரசுக்கு ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை appeared first on Dinakaran.