சாதிய பாகுபாடுகளை அனுமதிக்கவே முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

3 months ago 21

புதுடெல்லி: எந்த விதத்திலும் சாதிய பாகுபாடுகளை அனுமதிக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளர் சுகன்யா சாந்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், மேற்குவங்க சிறை சட்டத்தின்படி, சிறையில் உள்ள வேலைகளை சாதிவாரியாக நியமிக்கப்படுகிறார்கள். அதாவது சமையல் வேலைகளை ஆதிக்க சாதியினரும், துப்புரவு பணிகளை குறிப்பிட்ட கீழ் சாதியை சேர்ந்தவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரிக்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், ‘உடல் உழைப்பை பிரித்தல், முகாம்களை பிரித்தல் மற்றும் கைதிகளின் அடையாளம் ஆகியவற்றில் சாதி அடிப்படையிலான பாகுபாடு இருக்கிறது. இதனால் மனித கண்ணியமும், சுயமரியாதையும் மறுக்கப்பட்டு, அனைத்து குடிமக்களின் அரசியலமைப்பு அந்தஸ்தை 17வது பிரிவு வலுப்படுத்தியிருக்கிறது என்று வரலாறு நெடுகிலும் சொல்லி வருகிறோம்.
கைதிகள் மனிதாபிமானமற்ற வேலைகளை செய்ய வைத்தாலும், நடத்தப்பட்டாலும் மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக எஸ்.சி, எஸ்டி மற்றும் அடையாளப்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு எதிரான பாகுபாடு தொடர்கிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட சாதியை பயன்படுத்த முடியாது.

அது ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான பாகுபாட்டை நிலை நிறுத்தக்கூடாது என்றும் கருதுகிறோம். கைதிகள் மத்தியில் பாகுபாடு இருக்க முடியாது. மேலும் துப்புரவு பணியை ஒதுக்குவதும், உயர் சாதியினருக்கு சமையல் பணியை வழங்குவதும் பிரிவு 15ஐ மீறுவதாக உச்ச நீதிமன்றம் கருதுகிறது. சாதாரண சிறையில் இருக்கும் ஒருவர், அவரது சாதியை பயன்படுத்தி கொண்டால் அவர் கீழ்த்தரமான வேலைகளில் மட்டும்தான் ஈடுபடுவார். எந்த ஒரு குழுவும் தோட்டி வர்க்கமாக பிறக்கவில்லை அல்லது கீழ்த்தரமான வேலைகளை செய்யவும் இல்லை என்று நம்புகிறோம். சமைக்க தெரிந்தவர்கள் அல்லது தெரியாதவர்கள் என்று வகைப்படுத்துவது தீண்டாமையின் அம்சங்களாகும். அதனை அனுமதிக்க முடியாது. வகைப்படுத்தப்பட்ட பழங்குடி உறுப்பினர்கள் பிறப்பிலிருந்தே குற்றவாளிகளாகவும், நேர்மையற்றவர்களாகவும் கருதப்படும்போது தவறான எண்ணம்தான் நிலைத்திருக்கும். சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை முறியடிக்கும் உரிமை பற்றிய ஒரு பகுதியுடன் சட்டப்பிரிவு 21ஐ மறுவடிவமைத்துள்ளோம். பிரிவினைக்கு வழிவகுக்கும் சாதிய பாகுபாடு போன்றவற்றின் அடிப்படையிலான தொழிலாளர் பணியை அனுமதிக்க முடியாது. அது அரசியல் சாசன பிரிவு 23ன் இந்த அம்சத்தை தாக்குகிறது.

ஒன்றிய அரசின் சிறை கையேட்டில் கைதிகளை சாதி அடிப்படையில் வகைப்படுத்துவதை 2016ம் ஆண்டு கையேடு அதற்கு தடை செய்ய வேண்டும். இதனால் அபாயகரமான சூழ்நிலையில் சாக்கடை தொட்டிகள் போன்றவற்றை சுத்தம் செய்ய கைதிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தொடர் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடிய குற்றவாளிகளை ஜாதிய ரீதியில் வகைப்படுத்தி வைத்திருந்தால் அத்தகைய பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும். அவைகள் சட்டவிரோதமானது. சிறைச்சாலையில் மட்டுமில்லை எந்த விதத்திலும் சாதிய பாகுபாடுகளை அனுமதிக்க முடியாது. எனவே இந்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மாற்றங்களை செய்ய வேண்டும். 3 மாதங்களில் இதனை முடித்து அதற்கான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த தீர்ப்பின் நகலை அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஒன்றிய அரசு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் சிறைச்சாலைகளுக்குள் உள்ள பாகுபாடுகளை இந்த நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. இதுகுறித்து பட்டியலிட்டு விசாரிக்கப்படும். குறிப்பாக குடிமக்கள் நேர்மையான பிரச்னைகளுடன் நீதிமன்றத்திற்கு வரும்போது, சட்டத்தின் அதிகாரத்தை இது எடுத்துக்காட்டுகிறது மற்றும் அதையே எழுதுகிறது. எதிர்காலம்: இதில் வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னும் சாதிய பிரச்னை இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் எதிர்காலம் என்ன என்பது கேள்வியாக உள்ளது. இதுபோன்ற விவகாரங்களை அம்பேத்கர், தனது அரசியல் சாசனத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். அதனை அனைவரும் கவனத்தில் கொண்டு கடைபிடித்து நடக்க வேண்டும்’ என்றார்.

 

The post சாதிய பாகுபாடுகளை அனுமதிக்கவே முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article